2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெற்றது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், “முன்னாள் கேப்டனாக இருந்த தோனியும் இதில் ஈடுபட்டுள்ளார்” என்று தெரிவித்திருந்தார். மேலும் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர், அங்கும் இக்கருத்தினை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பதிலளித்த தோனி, “ஐபிஎஸ் அதிகாரி எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளார்” எனக்கூறி ரூ. 100 கோடி மான நஷ்டஈடு கோரினார். இதுதொடர்பான சென்னை ஐகோர்ட்டில் 2014 ஆம் ஆண்டு தோனி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிற்கு ஐஏஎஸ் அதிகாரியும் பதில் தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து தோனி தரப்பில் “சம்பத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில் உள்ள தகவல்கள் நீதிமன்றங்களை களங்கப்படுத்தும் வகையிலும், நீதித்துறை மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வகையிலும் உள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்” என்று மறு மனுவானது தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு தற்போது நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை ஆய்வு செய்த நீதிபதிகள் தோனி தரப்பில் கூறப்பட்ட கருத்துக்கள் சரியானதுதான் என்று கூறி, ஐ.பி.எஸ் அதிகாரிக்கு 15 நாள்கள் சிறை தண்டனையை விதித்தனர்.
இதையடுத்து அதிகாரி தரப்பில், ‘இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். எனவே கால அவகாசம் வேண்டும்’ என கூறப்பட்டதால் இந்த 15 நாட்கள் தண்டனை தீர்ப்பினை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.