தமிழ்நாடு

ஜாக்டோ ஜியோவை வெளுத்து வாங்கிய நீதிபதி: போராட்டத்திற்கும் கடும் கண்டனம்

ஜாக்டோ ஜியோவை வெளுத்து வாங்கிய நீதிபதி: போராட்டத்திற்கும் கடும் கண்டனம்

webteam

நீதிமன்ற உத்தரவையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ - ஜியோ அமைப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி கிருபாகரன், 5 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே அவமானம் என்று கூறினார். கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும், ஆசிரியர்கள் என்ன தொழிலாளர்கள் வர்க்கத்தினரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஜாக்டோ - ஜியோவின் போராட்டத்தால் மாணவர்கள் பாதிப்படைந்தால், அதற்கு ஆசிரியர்கள் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்தார். 

ரூ.40, 50 ஆயிரம் ஊதியம் வாங்கும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமாகாது என்று சாடிய நீதிபதி, அத்துடன் நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாட முடியாத நிலை ஏற்படும் என்றார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு எதிராக அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பிய அவர், இதுகுறித்து வரும் 18ஆம் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் அரசியல் ஆதாயத்திற்காகவே ஆளும், எதிர்கட்சிகள் செயல்படுகின்றன என்றும் அவர் விமர்சித்தார்.