தமிழ்நாடு

"சொல்லாமல் விடைபெறுவதற்கு மன்னிக்கவும்" - தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி உருக்கமான கடிதம்!

"சொல்லாமல் விடைபெறுவதற்கு மன்னிக்கவும்" - தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி உருக்கமான கடிதம்!

நிவேதா ஜெகராஜா

மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, இன்று கொல்கத்தா புறப்பட்டார். புறப்பட்ட பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரது இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். இருந்தும் அதனால் மாற்றம் ஏதும் நிகழாததால், இன்று அவர் மேகாலயா கிளம்பினார். பொதுவாக இப்படி ஒரு நீதிபதி மாற்றப்படுகையில் அவருக்கு பார் கவுன்சில், வழக்கறிஞர் சங்கங்கள் தரப்பில் பிரிவு உபசார நிகழ்ச்சிகள் நடத்தபடும். அவற்றையும் தவிர்த்துவிட்டு சென்றிருந்தார் சஞ்ஜிப் பானர்ஜி.

இந்நிலையில், புறப்பட்டுச்சென்ற பின்னர், அவருக்காக குரல் கொடுத்த - அவருடைய மாற்றத்துக்கு வருந்திய வழக்கறிஞர்களுக்கும் சக நீதிபதிகளுக்கு நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள என் குடும்பத்தினருக்கு...’ என தொடங்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பவை:

”தனிப்பட்ட முறையில் உங்களிடம் விடைபெறாமல் செல்வதற்காக மன்னியுங்கள். என்னுடைய நடவடிக்கைகள் உங்களை புண்படுத்தி இருந்திருந்தால், அது தனிப்பட்ட முறையிலானது இல்லை என்பதை புரிந்துக்கொள்ளவும். எனது நடவடிக்கை, உயர் நீதிமன்ற நலனுக்கானது மட்டுமே. என் மீதான உங்களின் அளவுகடந்த அன்பினால் பூரித்து போயிருக்கிறேன். 

நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்தான் சிறப்பானவர்கள். அப்படியானவர்கள், திறமையான நிர்வாகத்தை நான் மேற்கொள்ளவும் உதவியுள்ளனர். அதற்கு உதவியாக இருந்த பதிவுத்துறைக்கும் நன்றி. இதேபோல வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகளை தொடர வேண்டும்.

எனக்காக நீண்ட நேரம் காத்திருந்த நீதிமன்ற ஊழியர்களுக்கும் நன்றி. இதுநாள் வரை ஆதிக்க கலாச்சாரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதை முழுமையாக தகர்த்தெரிய என்னால் இயலவில்லை. இந்த அழகான மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கடன் பட்டுக்கிறேன். எனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்” என உருக்கமாக அதில் எழுதியுள்ளார்.