குறிப்பிட்ட சமூக பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என குறிப்பிட்டு ஏன் கூறினார்? எப்படி கூறலாம்? அதற்கான அவசியம் என்ன? என்று நீதிபதி கடுமையான கேள்வியை முன்வைத்தார்.
சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது வழக்கு பதியப்பட்டது. இந்த புகாரில் முன் ஜாமின் கோரி கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கஸ்தூரி தரப்பில் " தெலுங்கு மக்கள் அனைவரையும் குறிப்பிட்டு அத்தகைய கருத்து தெரிவிக்கப்படவில்லை. சில குறிப்பிட்ட தனிநபர்கள் பொருட்டே இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார். அது தொடர்பாக விளக்கமளித்து மன்னிப்பும் கோரியுள்ளார். ஆனால் விளக்கமளித்து, மன்னிப்பு கோரிய பின்னரும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் நோக்கத்தோடு இந்த விசயம் கையாளப்பட்டு 24 மணிநேரத்தில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பேசிய வீடியோவும், மன்னிப்பு கோரியதும் சமூக வலைதளத்தில் உள்ளது. கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?" என வாதிட்டார்.
அதற்கு பதிலளித்த நீதிபதி, "குறிப்பிட்ட சமூக பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என குறிப்பிட்டு ஏன் கூறினார்? எப்படி கூறலாம்? அதற்கான அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க: தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்தார் கஸ்தூரி.. 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதற்கு கஸ்தூரி தரப்பில், "தவறு செய்ததற்காகக் மன்னிப்பு கோரியுள்ளார். அதற்காக அவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டிய தேவை இல்லையே" என தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய நீதிபதி, "குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக பேசியது தேவையற்றது. கல்வியறிவு பெற்றவர், சமூக ஆர்வலர் என தன்னை அடையாளப்படுத்தும் மனுதாரர் எப்படி இத்தகைய கருத்தை தெரிவிக்கலாம்? சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வீடியோக்களை பார்க்கையில் அது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும்தானே? உங்களின் மன்னிப்பு அதை உணர்ந்ததாக தெரியவில்லை. கூறியதை நியாயப்படுத்த விரும்புவதாக உள்ளது" என குறிப்பிட்டார்.
மேலும், “தெலுங்கு மக்கள் வந்தவர்கள் அல்ல, தமிழகத்தைச்சேர்ந்தவர்கள், தமிழகத்தின் பகுதியானவர்கள்”என திட்டவட்டமாக கூறினார்.
அரசு தரப்பில், ”குறிப்பிட்ட சமூக மாண்பை குலைக்கும் வகையில் கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். கஸ்தூரிக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது, பிறருக்கு இதுஒரு பாடமாக இருக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
இந்நிலையில் பேசிய நீதிபதி, கஸ்தூரி அவதூறு பேச்சு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன, சமூக வலைதளங்களில் இருந்து கஸ்தூரி பேசிய வீடியோக்கள் நீக்க என்ன நடவடிக்கைஎடுக்கப்பட்டது முதலிய கேள்விகளை எழுப்பினார். பின்னர் கஸ்தூரி தரப்பில் கேட்டுகொண்டதன் பேரில் வழக்கு சிறுதுநேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.