சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதானம் தொடர்பாக பேசியிருந்தது சர்ச்சையாகி இருந்தது. இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றிருந்தார். திமுக எம்.பி ராசாவும் சானாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ – வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 23 ம் தேதி இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆறாம் தேதி அளிக்கப்பட்டது. அதில், “அமைச்சர்களுடைய கருத்துகள் பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய, பிழையான, அரசியல் சட்டத்திற்கு முரணான தவறான தகவல்களை கொண்டதாக இருக்கின்றன.
ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் அனைத்து குடிமக்களுக்கும் சம சுதந்திரம் வழங்க வலியுறுத்தும் நிலையில், வெறுப்பு மற்றும் பிரிவினை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவது ஆபத்தானது. உதயநிதி, ஆ.ராசா ஆகியோரின் கருத்துகள் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அரசியல் சாசன பதவி வகிப்பவர்கள் தங்கள் சொந்த மக்கள் பின்பற்றும் குறிப்பிட்ட நம்பிக்கையை ஒழிப்பதாக பேச முடியாது. கருத்து சுதந்திரமானது அரசியல் சட்டத்திற்கு விரோதமாக பேசவோ, குறிப்பிட்ட நம்பிக்கைக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசவோ, அரசியல் சாசன பதவி வகிப்பவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் என கருத முடியாது.
குறிப்பிட்ட நம்பிக்கையை ஒழித்துவிடுவதாக இவர்கள் பேசியது மதச்சார்பற்றதன்மையின் மதிப்புகளின் கீழ் இவர்கள் எடுத்த உறுதிமொழியை மீறும் செயல். சனாதன தர்மம் என்பது மக்களின் உயர்வுக்கான ஒரு வழிகாட்டு விதி. சனாதன நம்பிக்கை என்பது மக்களை ஒருங்கிணைப்பதற்காகவே தவிர, பிளவுபடுத்துவதற்கு அல்ல. அந்த ஒருங்கிணைப்பு பணிகளை தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைய சமுதாயத்தில் நிலவும் சமத்துவமின்மை ஒழிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், அதற்காக ஒட்டுமொத்த வர்ணாசிரமத்தை குற்றம் சொல்ல முடியாது. வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை உருவாக்கவில்லை. தொழிலின் அடிப்படையில் தான் சமூகத்தை பிரித்திருக்கிறது. இன்றைய சமுதாயத்தில் அது பொருந்துமா பொருந்தாதா என்பது விவாதத்திற்குரியது” என தெரிவித்தார்.
சனாதன தர்மத்தை தவறாக வர்ணாசிரம தர்மத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி அனிதா சுமந்த், ரிக் வேதம் சொல்லக்கூடிய பழமையான வர்ணாசிரம தர்மத்தின் மீது பழிபோட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய அவர், “நாட்டில் சாதிய நடைமுறை என்பது நூற்றாண்டை கூட தாண்டாத நிலையில் ஒட்டுமொத்த வர்ணாசிரமத்தை குறை கூற முடியாது. மாநிலத்தில் இருக்கும் சாதி ரீதியிலான பிரிவினையை ஒழிக்க அதிகாரத்தில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அதற்கு ஆதரவாக பேசுவது போல் இவர்களின் பேச்சுக்கள் உள்ளது.
விமர்சனங்கள் வளர்ச்சிக்கு அவசியமானது தான் என்றாலும், அவை ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். கடந்த கால நியாயமற்ற அநீதிகளை சரி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இன்று நடைமுறையில் உள்ள சாதிய சமத்துவமின்மை ஒழிக்கப்பட வேண்டும். சாதிய அடிப்படையில் மக்கள் கொடூர முகத்தை காட்டுவதற்கு காரணம் பல்வேறு சாதிய பிரிவினருக்கு அரசு கொடுக்கக்கூடிய சலுகைகள் தான். யார் எந்த நம்பிக்கையை பின்பற்றினாலும், தர்மத்தை யார் காக்கிறார்களோ, அவர்களை தர்மம் காக்கும்” என தெரிவித்திருந்தார்.