அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதற்கு முன்னதாக 11 பேர் கொண்ட அதிமுகவின் வழிக்காட்டுதல் குழு உறுப்பினர்களை பழனிசாமி அறிவித்தார்.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் புதியதலைமுறைக்கு அளித்தப் பேட்டியில் "அன்வர் ராஜாவின் பெயர் வழிக்காட்டுதல் குழுவில் இடம்பெறாதது வியப்பாக இருக்கிறது. இஸ்லாமியர் பிரதிநிதி என்ற முறையிலும் மூத்த தலைவர் என்ற அடிப்படையிலாவது அவரது பெயர் இடம்பெற்றிக்க வேண்டும். இப்போது இந்த 11 பேர் குழுவை விரிவுப்படுத்தலாம். அப்போது இடம்பெறலாம். இப்போது இந்தக் குழு அவசரமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு முதல்வர் ஓபிஎஸா ஈபிஎஸா என்ற குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது."
"முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது முக்கியமானது. வாக்கு செலுத்தும் மக்கள் யார் முதல்வர் வேட்பாளர் என்று எண்ணிதான் வாக்களிக்கிறார்கள். தேர்தல் வருவதற்கு 8 மாதங்களுக்கு முன்பாகவே முதல்வர் வேட்பாளரை அறிவித்து அதிமுக குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவே கருதுகிறேன். வழிக்காட்டு குழுவுக்கான அதிகாரங்கள் என்ன இன்னும் விஸ்தரிக்கப்படுமா என்று இனிமேல்தான் தெரியும். முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிடலாம் ஆனால் முதல்வர் யார் என்பதை நிர்ணயிக்கப்போவது வாக்காளர்கள்தானே" என்றார் தராசு ஷ்யாம்