தமிழ்நாடு

புதிய தலைமுறை மீதான வழக்கை கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டம்

புதிய தலைமுறை மீதான வழக்கை கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டம்

Rasus

புதிய தலைமுறை மீதான வழக்கை கண்டித்து கோவை மற்றும் மதுரையில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் நடைபெற்ற வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை நிர்வாகம் மற்றும் அதன் செய்தியாளர் மீது கோவை பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மீது காவல்துறையினரின் வழக்குப்பதிவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இதுகுறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வந்து பேசினார். இதனிடையே அரசு கேபிள் செட்டாப் பாக்ஸில் 124-வது இடத்தில் இருந்த புதிய தலைமுறை 499-வது இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்மொழி சேனல் வரிசையில் இருந்த புதிய தலைமுறை பிறமொழி சேனல் வரிசையில் பின்னுக்கும் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய தலைமுறை மீதான வழக்கை கண்டித்து கோவை மற்றும் மதுரையில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள், “ நசுக்காதே.. நசுக்காதே.. ஊடக சுதந்திரத்தை நசுக்காதே” என முழக்கங்களை எழுப்பினர். மேலும் புதிய தலைமுறை மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதேபோல் கோவையில் பத்திரிகையாளர்கள் வாயில் கறுப்புத் துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினரின் நடவடிக்கைகளை கண்டித்து முழுக்கங்களை எழுப்பினர்.