தமிழ்நாடு

“எப்போது எந்த உடை அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்” - எம்.பி. ஜோதிமணி காட்டம்

“எப்போது எந்த உடை அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்” - எம்.பி. ஜோதிமணி காட்டம்

webteam

எந்த தருணத்திற்கு எந்த உடை அணிய வேண்டும் என்பது தனக்கு நன்றாகவே தெரியும் என கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவரது ஃபேஸ்புக் பதிவில், “சர்வதேச பெண் தலைவர்கள் சந்திப்பிற்கான எனது பயணத்திற்கு எனது தொகுதியில் இருந்தும் வெளியில் இருந்தும் குவிந்து வரும் வாழ்த்துக்கள் என்னை பெரு மகிழ்ச்சி அடையச் செய்கிறது. அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.

எனது உடைகளை விமர்சனம் செய்யும் காவி, பெண் வெறுப்பு நபர்களின் மனக்கசப்பை புரிந்து கொள்ள முடிகிறது. எந்த தருணத்திற்கு எந்த உடை அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அது எனது தனிப்பட்ட உரிமையும் கூட. ஆகவே அமைதி கொள்க!

பெண்களின் உடைகள் ஏன் எப்போதும் விவாதத்திற்கான ஒரு பொருளாக இருக்க வேண்டும்? ஒருவருடைய தனிப்பட்ட தேர்வுகள் பற்றி மற்றவர்களுக்கு என்ன கவலை? இங்கு இருக்கும் அனைத்து ஆண்களும் குறிப்பாக என்னை விமர்சனம் செய்பவர்கள் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வேஷ்டியை தான் அணிந்து கொண்டு இருக்கிறார்களா? தமிழ், இந்திய கலாச்சாரம் என்பது அடிப்படையில் மற்றவர்களை மதிப்பது. அதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.

காட்டன் புடவைகள், ஜீன்ஸ் மற்றும் சட்டைகள் மீது எனக்கு ஆழ்ந்த பிரியம் உண்டு. நான் திரும்பியவுடன் மேலும் சில புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் மனக் கவலைகளுக்காக!. அதுவரை கலாச்சாரம் என்பது என்ன என்று கொஞ்சமாவது ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள். அதை பெண்கள் மட்டும் ஏன் சுமந்து செல்ல வேண்டும்? ஆண்கள் ஏன் சுமக்கக் கூடாது?

நான் கலந்துகொள்ள இருக்கும் இந்த சந்திப்பிற்கான மிக முக்கியமான ஒரு திட்டம் பெண் தலைவர்கள் எப்படி அவர்களுடைய உடைகள் திருமண வாழ்க்கை அவர்களுடைய புறத்தோற்றம் அவர்கள் எப்படி சிரிக்கிறார்கள் போன்ற விஷயங்களின் அடிப்படையில் விமர்சிக்க படுகிறார்கள் என்பதுதான். இந்தப் பெண் வெறுப்பு மன நிலையை எதிர்த்து போராட வேண்டும் என்பதில் நாங்கள் மிகத் தீவிரமாக இருக்கிறோம். இந்த போராட்டத்தில் எங்களோடு இருக்கும் எல்லா ஆண்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.