எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் வரலாறு குறித்து பொன்னையன் மற்றும் வளர்மதியிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என சாடியுள்ளார் ஜே.சி.டி பிரபாகர்.
அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜே.சி.டி.பிரபாகர் சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு யார் காரணம் என்ற தகவலை சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். 1989ஆம் ஆண்டு போடி தொகுதியில் ஜெயலலிதாவிற்கு எதிராக தலைமை ஏஜென்டாக ஓ.பி.எஸ் இருந்தார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது தவறானது செய்தி. பொய்யான தகவலை எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். ஜானகி ஒன்றும் தீண்டத்தகாதவர் இல்லை; இரட்டை இலைக்காக தியாகம் செய்தவர் ஜானகி.
எடப்பாடி பழனிசாமியின் சமீபகாலப் பேச்சு கட்சியை ஒற்றுமைப்படுத்துவதாக எனக்கு தெரியவில்லை. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் செல்லும் உரிமை ஓ.பி.எஸ்.-க்கு இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைகாட்சியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என கூறும் அளவிற்கு தான் எடப்பாடிக்கு தகவல் தெரியும்.
அதிமுகவின் வரலாறு குறித்து பொன்னையன் மற்றும் வளர்மதியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். யாரோ ஒருவரின் பிடியில் கட்சி செல்லக்கூடாது என கூறிதான் ஓபிஎஸ் தர்ம யுத்தம் மேற்கொண்டார். தற்போது கட்சியின் ஒற்றுமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் மட்டுமே ஓபிஎஸ் அனைவரையும் அரவணைத்து வருகிறார்.
ஒரு குடும்பத்திற்குள் கட்சி சென்று விடக்கூடாது என அன்று சொன்னோம். அதேபோல இப்போது கட்சி 5 பணக்காரர்களுக்குள் செல்லக்கூடாது என தெரிவித்து வருகிறோம். காவல்துறை முழுமையான சிசிடிவி காட்சியை வெளியிட்டால் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு யார் காரணம் என அனைவருக்கும் தெரியும். சசிகலா, தினகரன் கட்சியில் இருப்பது பலமாக இருக்கும் என ஓ.பி.எஸ்.நம்புகிறார். எப்போது சந்தித்து அழைப்பு விடுக்க வேண்டும் என்பதெல்லாம் ஓபிஎஸ் தான் முடிவு செய்வார்'' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: மாறிமாறி பேசுவதுதான் திமுகவின் திராவிட மாடல் - எடப்பாடி பழனிசாமி