தமிழ்நாடு

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ: அப்போலோ விளக்கம்

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ: அப்போலோ விளக்கம்

Rasus

மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்று வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து அப்போலோ தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது பழச்சாறு அருந்துவது போன்ற வீடியோவை தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். கடந்தாண்டு தொடர்ந்து 75 நாட்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். துவக்கத்தில் அவருக்கு காய்ச்சல் என்று கூறப்பட்டது. பின்னர் அவருக்கு நுரையீரல் மற்றும் கிட்னி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருப்பதாக அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பெறுவது போன்ற எந்தவொரு புகைப்படத்தையும் அப்போலோ வெளியிடவில்லை.

இந்நிலையில் ஜெயலலிதா மறைந்து ஓராண்டுக்குப் பின் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது வீடியோ வெளியாகி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 20 விநாடி வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை என அப்போலோ தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. இருப்பினும், அந்த வீடியோ ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோதான் என்றும், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் இந்த வீடியோவை எடுத்திருக்கலாம் எனவும் அப்போலோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.