மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.5.5 கோடி வரை இருந்ததாக அப்போலோ மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்தாண்டு செப்டம்பர் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து அரசு தரப்பில் இன்று விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் பாலாஜி, பாபு ஆப்ரஹாம் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அப்போது ஜெயலலிதாவின் மருத்துவச் செலவுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மருத்துவர் பாலாஜி, அவரது மருத்துவச் செலவு ரூ.5.5கோடி என்று தெரிவித்தார்.