தமிழ்நாடு

ஓபிஎஸ் செய்த உறுதிமொழி.. தினகரனால் காத்திருந்த சசிகலா.. ஜெயலலிதா நினைவிடத்தில் பரபரப்பு

ஓபிஎஸ் செய்த உறுதிமொழி.. தினகரனால் காத்திருந்த சசிகலா.. ஜெயலலிதா நினைவிடத்தில் பரபரப்பு

webteam

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர், அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அதிமுக சார்பில் உறுதி மொழி ஏற்று கொண்டனர். குறிப்பாக, ஜெயலலிதா தான் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற நிலையை மீண்டும் உருவாக்க நாம் அனைவரும் சூளுரைப்போம் என்று அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அத்துடன் “வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து வரவிற்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் ஒப்பில்லா பேரியக்கமான அதிமுக வெற்றிக்கு உழைத்திடுவோம். அதிமுகவிற்கு மாபெரும் தலைவர்களால் தரப்பட்ட மதிப்பும், முக்கியத்துவமும் இன்று சிலரால் திட்டமிட்டு பறிக்க முயல்வதை தொண்டர்கள் துணையோடு முறியடித்து, அதிமுக என்ற அப்பழுக்கில்லா இயக்கத்தை மிடுக்கு குறையாத எஃகுகோட்டையாக தொடர்ந்து செயல்படுத்திட உறுதி ஏற்போம்” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அஞ்சலி செலுத்திய பின்னர், ஓ. பன்னீர்செல்வம் உறுதிமொழி ஏற்ற அதேமேடையில், அவர்களது பேனரை கழற்றி விட்டு, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேனர் வைக்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, எம்ஜிஆர் அவர்களால் துவங்கப்பட்ட கட்சி ஜெயலலிதா கட்டிக்காத்து வளர்த்த அதிமுக இன்றைக்கு ஒரு அணியின் கட்டுப்பாட்டில் இருப்பதை மீட்டெடுப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அஞ்சலி செலுத்த வந்த டி.டி.வி. தினகரனால், சுமார் 20 நிமிடங்களாக ஜெயலலிதா நினைவிடத்திற்குள் செல்ல முடியாமல் சசிகலா வழியில் காத்திருந்தார். பிற்பகல் 1.05 மணிக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டிவி. தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வருகை தந்தார். தினகரனைத் தொடர்ந்து 1.10 மணிக்கு சசிகலாவும் நினைவிடத்திற்கு வந்தார்.

டி.டி.வி. தினகரன், ஜெ. நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தியப் பிறகு, உறுதிமொழி எடுப்பதற்காக நினைவிட வளாகத்தில் வழியில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. சசிகலா நினைவிட வளாகத்திற்கு நுழைந்த நிலையில் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் உறுதிமொழி எடுப்பதற்கான மேடை முன்பாக வழியில் குவிந்திருந்தனர்.

மேலும் தினகரனின் இரு பிரசார வாகனங்களும் வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் நினைவிடத்திற்குள் செல்ல முடியாத சசிகலா 20 நிமிடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தார்.