தமிழ்நாடு

ஜெ.சிகிச்சையின்போது சிசிடிவி கேமரா அணைத்து வைக்கப்பட்டது: பிரதாப் ரெட்டி தகவல்

webteam

ஜெயலலிதா தங்கியிருந்த பகுதியில் எதிர்பாராத விதமாக சிசிடிவி கேமரா அணைத்து வைக்கப்பட்டது என அப்போலோ குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்திந்த அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, “ ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தர சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அப்போலோ மருத்துவர்கள் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பான சிகிச்சை அளித்தனர். உடல்நலம் தேறி வருவதற்கு அத்தனை சிகிச்சைகளையும் அப்போலோ செய்தது. ஒரு நாள் சிகிச்சை அல்ல; பல வாரங்கள் சிகிச்சை தொடர்ந்து நடந்தது. எல்லா தகவலையும் ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தில் கொடுத்துள்ளோம். அப்போலோவை பொருத்தவரை எல்லா உறவினர்களையும் அனுமதிக்க மாட்டோம். ஆனால் பணியில் உள்ள மருத்துவரோடு சென்று பார்க்கலாம்.ஜெயலலிதாவை யார் சந்திக்க வேண்டும் என உடன் இருந்தவர்கள் கூறிய நபர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக சிசிடிவி கேமரா அணைத்து வைக்கப்பட்டது. எல்லோரும் பார்ப்பார்கள் என்பதற்காக  கேமரா எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இதில் ஆஜராகி ஏராளமானோர் வாக்குமூலம் அளித்துவருகின்றனர். இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆஜராகவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெங்களூரு சிறையில் இருக்கிறார். அவரது தரப்பில் கடந்த 12ஆம் தேதி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில், ஜெயலலிதாவுக்கு 20 மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும், சிகிச்சை பெற்று வரும்போது அவரை ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் நிலோபர் கபில் உள்ளிட்டோர் பார்த்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாளிதழில் வெளியான ஜெயலலிதா மரணம் குறித்த சசிகலா பிரமாணப் பத்திர தகவல்கள் தவறானவை என்று, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தெரிவித்தது. இந்த தகவல் அனைத்தும் சசிகலாவுக்கு ஆதரவானவர்களால் கொடுக்கப்பட்டதாகவும், அதில் இருக்கும் பெரும்பாலான தகவல்கள் தவறானவை என்றும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.