தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்

கலிலுல்லா

திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக, திமுக பிரமுகர் நரேஷ் என்பவர் மீது அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். நரேஷின் சட்டையை கழற்றி, அரைநிர்வாணமாக்கி தெருவில் இழுத்துச்சென்று தாக்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரில் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த திங்கட்கிழமை அவர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.

இதனிடையே ஜெயக்குமாரின் பிணை மனு சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவிய நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென ஜெயக்குமார் தரப்பில் வாதிடப்பட்டது. வன்முறையை தூண்டும் வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருப்பதால் கொலை முயற்சி பிரிவும், தகவல் தொழில்நுட்ப பிரிவும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளை விதித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் 2 வாரங்கள் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டார்; நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்க ஆட்சேபமில்லை என காவல்துறை தெரிவித்த நிலையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.