இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இருவரின் அசாத்தலான நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘அமரன்’.
2014-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனில் பணிபுரியும் போது, ஷோபியானில் நடந்த காசிபத்ரி ஆபரேஷனில் முக்கியப் பங்கு வகித்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ வீரர்களின் தீரம்மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.
அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தமிழக முதல்வர், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாஜக அண்ணாமலை மற்றும் அன்புமணி ராமதாஸ் முதலியோர் பாராட்டியிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் திரைப்படத்தை பார்த்துவிட்டு மனம்நெகிழ்ந்து பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் படம் பார்த்த பெரும்பாலான அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பாராட்டியிருந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அனைத்து முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக கூறி அமரன் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமரன் படம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பேசியிருக்கும் ஜவாஹிருல்லா, காஷ்மீரில் உயிர்நீத்த மண்ணுரிமை போராளிகள் அனைவரையும் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் அமரன் படம் சித்திரப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டிருக்கும் அவர், “அண்மையில் வெளிவந்துள்ள அமரன் என்ற திரைப்படம் மண்ணுரிமைப் போராளிகளை தீவிரவாதிகளாக சித்திரம் தீட்டி அந்த வெறுப்பின் வீச்சை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் பரப்பும் நுண்ணிய கருத்தியல் பயங்கரவாதத்தை கைக் கொண்டிருக்கிறது.
காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி போன்ற கயமைத்தன படங்களின் கருத்தியலை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கலைநயமாக ஏற்றியுள்ள படமாக அமரன் இருப்பதை முற்போக்கு விமர்சகர்கள் ஆதாரங்களோடு நிறுவியுள்ளனர்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் அரசியல் தலைவர்கள் இதுபோன்ற படங்களை ஆதரிக்க கூடாது என்று பதிவிட்டிருக்கும் அவர், “முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கூறுகளைக் கொண்ட இப்படத்தை பல தலைவர்களும் அதன் நுண்ணரசியல் அறியாமல் இப்படத்தை பாராட்டி இருப்பதும் வேதனைக்குரியது. இதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும்.
திரைப்படத் துறையில் இருக்கும் திறமைமிக்க கலைஞர்கள் எடுத்த படங்களான மாநாடு, மாமனிதன், அயோத்தி, மேற்கு தொடர்ச்சி மலை, ஜெய் பீம் போன்ற படங்களின் இயக்குநர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநாட்டு மேடையில் விருதளித்து கண்ணியப்படுத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
மேலும் ஆயிரக்கணக்கான அபலைப் பெண்களின் மீது அணுவளவும் அனுதாபம் காட்டாமல் களங்கப்படுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கும் அவர், “காஷ்மீரில் 'பாதி விதவைகள்' என்ற கொடூர வாழ் நிலையில் நடைப் பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான அபலைப் பெண்களை இப்படம் கலை என்ற பெயரால் களங்கப்படுத்துகிறது.
மண் உரிமைக்கும் தன்னுரிமைக்கும் ஜனநாயக வழியில் போராடியவர்கள் பலர் சீருடைகளில் ஒளிந்துள்ள வன்ம மிருகங்களால் வேட்டையாடப்பட்டனர். பல்லாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்கள் மீது அணுவளவும் அனுதாபம் காட்டாமல் அவர்கள் அத்தனை பேருமே பயங்கரவாதிகள் என்று இப்படம் சித்திரிப்பது எத்தனை கொடுமை” என கூறியுள்ளார்