அதிமுகவின் பொன்விழா மாநாடு நேற்று (ஆகஸ்ட் 20) மதுரையில் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளும் வியக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்கிற நோக்கில், 'டிஜிட்டல்' திரை, கலை நிகழ்ச்சிகள், உணவு வகைகள் எனப் பலவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் மாநாட்டில், காலை முதல் இரவு வரை உணவு வழங்கப்படும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்றாற்போல், அதைச் சமைக்க சமையலர்கள், பணியாளரகள் என 10,000 பேர் பணியமர்த்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் வழங்கப்பட்ட உணவு, தரமில்லாமல் இருந்ததாக இன்று விமர்சனம் எழுந்தது. உணவு முழுமையாக வேகாமல் இருந்ததாகவும், சுவை இல்லாததாலும் தொண்டர்கள் அதைச் சாப்பிடாமல் சென்றதாகப் புகார் முன்வைக்கப்பட்டது. இதற்கிடையே அம்மாநாட்டில் தயார் செய்யப்பட்ட உணவுகள் அண்டா, அண்டாவாக மாநாட்டுத் திடலில் கொட்டப்பட்டதாகச் செய்திகளும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகின.
குறிப்பாக அண்டாக்களில் மீதியிருந்த புளியோதரை, உருளைக்கிழங்கு, அவரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட வெட்டப்பட்ட காய்கறிகள் ஆகியன டன் கணக்கில் திடலில் கொட்டப்பட்ட வீடியோக்களும் வெளியாகின. இதுதொடர்பாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இதுகுறித்து மதுரை அதிமுகவினர் சிலர், “இந்த மாநாட்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் வருவதாக இருந்தனர். ஆனால் 1 லட்சம் பேர்தான் வந்தனர். நிறைய பேர் வரவில்லை. அப்படி, மாநாட்டுக்கு வந்தவர்கள் பலர் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டனர். இதன் காரணமாகத்தான் உணவு வீணாகிப் போயுள்ளது” எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலியிடம் நாம் பேசினோம். அவர், “நேற்று 20 லட்சம் மக்கள் கூடிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டைப் பார்த்து வியந்தவர்கள் பல லட்சம் பேர்; பயந்தவர்களும் பல லட்சம் பேர். அப்படி பயந்தவர்கள் யார் என்றால், எதிர்க்கட்சியினர். அவர்கள் இந்த மாநாட்டில் எப்படியாவது குறையைக் கண்டுபிடிக்க வேண்டும் என இருந்தனர். ஆனால் மாநாட்டுக் கூட்டத்தைப் பார்த்து, ’அதில் கலந்துகொண்டவர்கள் குறைவு’ என்று அவர்கள் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். காரணம், எல்லா சேனல்களும் மாநாட்டை ஒளிபரப்பின. அடுத்து, ’கூட்டத்தில் கட்டுக்கோப்பு இல்லை’ என்று அவர்கள் சொன்னாலும் அதையும் யாரும் நம்ப மாட்டார்கள்.
200 பேர் கூடும் கூட்டத்தில்கூட, பெண்களிடம் அத்துமீறுகின்ற சம்பவங்கள் இன்று நடக்கிறது. இந்த காலகட்டத்தில், 20 லட்சம் கூடிய அந்த மாநாட்டில், எந்த அசம்பாவிதமும் இல்லை. ஆக, இறுதிமுயற்சியாக எதை எடுத்தால் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்ற நோக்கில் உணவைச் சொல்லியிருக்கிறார்கள். மாநாட்டில் 5 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டது. 5 லட்சம் பேருக்கு உணவு தயாரிப்பது என்பது மிகப்பெரிய வேலை. இந்த உணவு விநியோகிக்கப்படுவதற்காக நிறைய Counters இருந்தன. இதில் ஏதாவது ஒரு Counter-இல் இத்தவறு நிகழ்ந்திருக்கலாம். ஆனால், எல்லா உணவு Countersகளுக்கும் நான்கூடச் சென்று சாப்பிட்டேன். சாம்பார் சாதம் விநியோகிக்கப்பட்டது. அருமையாக இருந்தது.
ஒரே நேரத்தில் 5 லட்சம் பேருக்கு சமையல் செய்ய முடியாது. இதை கருத்தில்கொண்டு சில உணவுகளை முன்கூட்டியே முதல்நாளே கொஞ்சம் சீக்கிரமாக அவர்கள் செய்திருக்கலாம். அதில் ஏதாவது தவறு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அது எனக்குத் தெரியாது. இதை ஒரு பெரிய குறையாகக் கண்டுபிடித்து எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன.ஜவஹர் அலி, அதிமுக செய்தித் தொடர்பாளர்
மேலும் மாநாட்டிற்கு யாரும் ருசிக்காக வரவில்லை. பசிக்கு உணவு வேண்டும். அதற்கு அங்கு முழுமையாகக் கொடுக்கப்பட்டது. எல்லா நிலைகளையும் வருத்திக்கொண்டுதான் அங்கு ஒரு தொண்டர் வருகிறார். விதவிதமாகச் சாப்பாடு கிடைக்கும் என்கிற நினைப்பில் விருந்துக்கு வரவில்லை. அதனால் அவர்கள் சாப்பாட்டைப் பற்றிப் பெரிதுப்படுத்தவில்லை.
இதற்கிடையே ஒருசிலர் உணவை குறை சொல்லியிருக்கலாம். அதை எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் பெரிதுப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் இவ்விஷயத்தில் பெரியளவில் உண்மை இல்லை. குறையைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்திருக்கின்றன.
கோவையில் நேற்று (திமுக முன்னெடுப்பில்) நடைபெற்ற நீட் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொள்ளாமல் ஹோட்டல்களிலும் டாஸ்மாக்குகளிலும் இருந்தனர். இதைக்கூட சில ஊடகங்கள் எடுத்து செய்தி வெளியிட்டிருந்தன. இதுகுறித்தும் கேள்வி கேட்க வேண்டும்.ஜவஹர் அலி, அதிமுக செய்தித் தொடர்பாளர்
ஆக, இதுபோன்று பெரியளவில் கூடும் கூட்டங்களில் சிறுசிறு குறைகள் ஏற்பட்டிருக்கலாம். அந்தக் குறைகளை மக்களோ, தொண்டர்களோ யாரும் பெரிதுப்படுத்தவில்லை. ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன. காரணம், ஏதாவது ஒன்றைக் குறைசொல்ல வேண்டும். அவர்கள் குறைசொல்வதற்கு எதுவும் இல்லை. கூட்டம் அதிகம், கட்டுக்கோப்பு, பெண்களுக்குப் பாதுகாப்பு, மருத்துவ வசதி என எல்லா வசதிகளும் நன்றாகவே செய்யப்பட்டிருந்தது. இதில் உணவுக்கென விநியோகிப்பட்ட நிறைய Counters-ல் ஏதாவது ஒன்றில் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம்” என்றார்.
தொடர்ந்து அவர், ”கொஞ்ச நாட்களுக்கு முன்பு லட்சக்கணக்கான அரிசி மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிப் போயின. விவசாயிகள் கஷ்டப்பட்டு அப்படி விளைவித்த அந்த அரிசி மூட்டைகளைப் பற்றி இந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை. இந்த மாநாட்டு உணவுப் பற்றிப் பேசுபவர்களும் அன்று வாய் திறக்கவில்லை. அடுத்து, இந்த மாநாட்டின் உள்ளே தொண்டர்கள் அமர்வதற்கு ஒன்றரை லட்சம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. இதில் மாநாட்டில் இணைந்தவர்கள் 20 லட்சம் பேர். இதில் மாநாட்டு நுழைவு வாயிலுக்குள்ளேயே வாகன நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் நுழைய முடியாமல் தவித்தது பல லட்சம் பேர்.
அவர்கள் உள்ளே நுழைய முடியாததால் சாப்பிட முடியாத சூழல் ஏற்பட்டது. தவிர, ஒன்றரை லட்சம் நாற்காலியில் உட்கார்ந்திருந்த தொண்டர்களைச் சுற்றி நின்றவர்களே 5 லட்சம் பேர். அதனால் சாப்பிட முடியாமல் போனவர்களே அதிகம். ஆக, மாநாட்டுக்கு உணர்வுப்பூர்வமாக, கொள்கைரீதியாக வந்தவர்களே அதிகம். யாரும் சாப்பாட்டுக்காக வரவில்லை. மேலும் காலை முதல் இரவு வரை நடந்த இந்த நிகழ்வுக்காக தொண்டர்கள் யாரும் வெளியில் செல்லவில்லை. அத்துடன் பெரும்பாலும் அவர்கள் சாப்பாட்டைத் தவிர்த்து, அங்கு வியாபாரம் செய்யப்பட்ட வேர்க்கடலை உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சாப்பிட்டனர். இதனாலேயே அங்கு உணவு வீணாகியதே தவிர, கெட்டுப் போனதால் வீணாகவில்லை” என்றார்.