தன்னுடன் பணியாற்றிய காவலர்கள், எஸ்.ஐ.க்கள், துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ஜாங்கிட் நன்றி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்தவர் எஸ்.ஆர்.ஜாங்கிட். இவர் அங்கு உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அதன்பின்னர் இவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 1985ஆம் ஆண்டு ஐபிஎஸ் பதவி பெற்றார். இவர் தனது முதல் பணியாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி எஸ்பியாக பணிபுரிந்தார். இவர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய போது பல முக்கிய பிரச்னைகளை கையாண்டார்.
அதன்பின்னர் நீலகிரி, கடலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்துள்ளார். ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களை கலக்கிய பவாரியா கொள்ளையர்களை ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். படிப்படியாக உயர்ந்து டி.ஜி.பி. ஆன ஜாங்கிட் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றினார்.
34 ஆண்டுகள் பணியாற்றியுள்ள ஜாங்கிட், சிறந்த சேவைக்காக இரண்டு முறை குடியரசுத்தலைவர் பதக்கமும், ஒரு முறை பிரதமர் பதக்கமும், மெச்சத்தகுந்த பணிக்காக இரண்டு முறை தமிழக முதல்வரின் பதக்கமும் பெற்றுள்ளார். காவல்துறை பணியிலிருந்து டிஜிபி ஜாங்கிட் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில், தன்னுடன் பணியாற்றிய காவலர்கள், எஸ்.ஐ.க்கள், துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ஜாங்கிட் நன்றி தெரிவித்தார். மேலும், “இந்திய காவல் பணியில் 34 ஆண்டுகள் பணிபுரிந்து உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். நெல்லை, தூத்துக்குடியில் சாதிமோதலை கட்டுப்படுத்தியதையும் பவாரியா கும்பலை பிடித்தது உள்ளிட்டவற்றை மறக்கமாட்டேன். என்னுடைய சிறப்பான பணிக்கு இரவுபகலாக ஒத்துழைத்த காவலர்களும், அதிகாரிகளும்தான் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.