தமிழ்நாடு

“ஜல்லிக்கட்டு நடத்தினால் சாதிய பிரச்னைகள் ஏற்படும்” - நீதிமன்றத்தில் வாதம்

webteam

ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டை சட்டம் ஒழுங்கு பிரச்னை இன்றி நடத்த இயலுமா? என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை
கண்காணிப்பாளர் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல்
செய்திருந்தார். அதில், “தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் முன்பு ஜல்லிக்கட்டு நடத்தியதாக எந்த ஆதாரங்களும் இல்லை.
ஆகவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் கிராமங்களின் பட்டியலில் ஸ்ரீவைகுண்டம் இடம்பெறவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி பெற்ற மாடுபிடி வீரர்களும் இல்லை, ஜல்லிக்கட்டு காளைகள் இல்லை.

இதனிடையே, புதுக்குடி எம்.எஸ்.ராஜா என்பவர் ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் எனும் பெயரில் 2017ஆம் ஆண்டு இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார்.
இது பதிவு செய்யப்படாத நிலையில், இவரின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களின் பட்டியலில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவை சேர்த்து பிப்ரவரி 4ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 23 முதல் 29க்குள்ளாக ஏதேனும் ஒரு நாள் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த காவல்துறை பாதுகாப்பு கேட்டு எம்.எஸ்.ராஜா மனு அளித்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் தாலுகா சாதிய மோதல்கள்
அதிகளவில் நடைபெறும் பகுதி. இந்த பகுதியில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்தினால், பதட்டம் அதிகரிப்பதோடு சாதிய ரீதியாகப் பாகுபாடு ஏற்படும்
சூழல் உள்ளது. ஆகவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவை சேர்த்த அரசாணையை ரத்து செய்து
ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கூடாது என உத்தரவிடவேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில்
சாதிய மோதல்கள் அதிகளவில் நிகழ்ந்துள்ளன. சமீபத்தில் கூட இதுபோன்ற சாதிய மோதலில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய்
இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. சாதிய பிரச்னைகள் காரணமாகக் கடந்த 15 ஆண்டுகளாக கபடி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது. ஆறு
ஆண்டுகளாகக் கோயில் திருவிழாக்களில் ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தினால் அது மிகப்பெரும் சாதிய மோதல்களுக்கு வாய்ப்பாக அமையும். ஆகவே, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டினை சட்டம் ஒழுங்கு பிரச்னை
இன்றி நடத்த இயலுமா? என்பது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள்
ஒத்திவைத்தனர். மேலும், வழக்கு நிலுவையில் இருக்கும் வரை ஜல்லிக்கட்டு நடத்த எவ்வித அனுமதியும் வழங்க வேண்டாமெனத் தூத்துக்குடி
மாவட்ட ஆட்சியர், மற்றும் எஸ்.பிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.