மக்கள் புரட்சியின் நினைவாய் சென்னை தீவுத்திடலில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழர் திருவிழாவாக ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும் என்று ஆர்ஜே பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆர்.ஜே.பாலாஜி, மக்கள் புரட்சியின் விளைவாக நமது அரசு அவசரச்சட்டம் மூலமாக ஜல்லிக்கட்டு போட்டிகளை நிரந்தரமாக நடத்த அனைத்துவிதமான வழிவகைகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளது. ஆனால், நிரந்தர வெற்றி என்பது பீட்டாவைத் தடை செய்வதும், பிசிஏ சட்டத்தை அமல்படுத்துவதுமே ஆகும். இதை அடைவதே நமது லட்சியம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புரட்சி அறவழியில் நடந்ததாலேயே உலகம் இதை ஏற்றுக்கொண்டதாகக் கூறியுள்ள ஆர்ஜே பாலாஜி, இந்தியா இந்த போராட்டத்தை புரிந்துகொண்டதோ இல்லையோ தமிழன் என்ற உணர்வுடன் ஒன்றாக சேர்ந்திருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டது. இந்த புரட்சியில் கிடைத்த வெற்றியை ஆரம்பம், தொடக்கமாகக் கொண்டாடுவோம் என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்த புரட்சியின் நினைவாய் சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை மாபெரும் தமிழர் திருவிழாவாக நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஆர்ஜே பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.