jallikattu PT Desk
தமிழ்நாடு

’யார் முதலில் காளையை விடுவது’ - தாமதமாக தொடங்கிய ஜல்லிக்கட்டு இரண்டே முக்கால் மணிநேரத்தில் முடிந்தது: எதனால்?

இரண்டு கிராமத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி இரண்டே முக்கால் மணிநேரத்திலேயே நிறைவடைந்தது.

webteam

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் இரண்டு கிராமத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் இரண்டு மணி நேரம் தாமதமாக ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது.

நார்த்தாமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. காலை 8 மணிக்கு போட்டி தொடங்க வேண்டியிருந்தது.

ஆனால், நார்த்தாமலை மற்றும் சத்தியமங்கலம் கிராம மக்களிடையே ஜல்லிக்கட்டு கோயில் காளையை முதலில் யார் அவிழ்த்து விடுவது என்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இரண்டு மணி நேரம் காலதாமதமாக 10.15 மணிக்கு தொடங்கியது.

அதற்கு முன்னதாக ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக நார்த்தாமலை கிராம மக்கள் வாடிவாசல் முன்பாக தர்ணா போராட்டத்திலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

போலீசார் அவர்களை கட்டுப்படுத்தியதோடு நார்த்தாமலை, சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றிய கிராமங்களின் முக்கியஸ்தர்கள் சமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் விளைவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை கைவிட்ட நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் புதுக்கோட்டை திருச்சி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 550 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்டுன.

அதனை 150 மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் களமிறங்கி போட்டி போட்டுக் கொண்டு தழுவினர்.

சில காளைகளை வீரர்கள் லாவகமாக அடக்கிய நிலையில் பல காளைகள் வீரர்களின் கைகளில் சிக்காமல் வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து வெளியேறி சென்றது.

இப் போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இறுதியாக மதியம் 2.45 மணிக்கு போட்டி நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் காளைகள் பாய்ந்ததில் 26 பேர் காயமடைந்தனர்.