ஜல்லிக்கட்டு சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு அரசிதழில் வெளியிடப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவால் தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய அரசின் மிருகவதைத் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறிய இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பின்னர், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கூபா உள்ளிட்ட அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன. கடந்த 31ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜராம தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற விலங்குகள் நல அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்தது. இந்தநிலையில், ஜல்லிக்கட்டு சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு அரசிதழில் வெளியிடப்பட்டது.