திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் மற்றும் மதுரை மாவட்டம் பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ3 லட்சம் நிதி உதவியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியின் முடிவிலும், பெற்ற பிள்ளையை பறி கொடுத்த தாய், கணவனை இழந்த மனைவி, தந்தையின் உயிரிழப்பால் மீளா துயரில் தவிக்கும் குழந்தைகள் என எதிர்காலத்தை தொலைத்துவிட்டு பறிதவிக்கும் பல குடும்பங்களை காணமுடிகிறது.
அப்படி ஒரு மீளா துயரில், புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா இன்று தவித்து வருகிறார். விவசாய கூலித்தொழிலாளியான இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் தனது கணவர் மாரிமுத்துவை இழந்துவிட்டார். இதையடுத்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கிடைக்கும் சொற்ப ஊதியத்தைக் கொண்டு தனது மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்தார்.
இந்நிலையில், அவரது மூத்தமகன் அரவிந்த் என்ற சிவக்குமார், பத்தாம் வகுப்புடன் படிப்பை தொடர மனமில்லாமல் கடந்த 4 ஆண்டுகளாக ஜே.சி.பி ஆப்ரேடராக வேலை பார்த்து வந்தார். மல்லிகாவுக்கு மாத மாதம் கிடைக்கும் ₹15 ஆயிரம் ஊதியத்தைக் கொண்டு, நடுமகன் பாக்கிராஜை இளங்கலை பட்டப் படிப்பும், இளைய மகன் முத்துக்குமாரை 12 ஆம் வகுப்பும் படிக்க வைத்து வந்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி பெரிய சூரியூர் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்ப்பதற்காக நேற்ற தனது சக நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சூரியூர் கிராமத்திற்கு அரவிந்த் வந்துள்ளார். அப்போது வாடிவாசலில் இருந்து சீரிப்பாய்ந்து வெளியே வந்த ஜல்லிக்கட்டு காளை ஒன்று, வேடிக்கை பார்க்க வந்த மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில், சிதறி ஓட முடியாமல் சிக்கிக்கொண்ட அரவிந்த் வயிற்றை காளை தனது கொம்புகளால் குத்திக் கிழித்தது.
இதையடுத்து மீட்கப்பட்ட அரவிந்த்-க்கு சம்பவ இடத்தில் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் தொடர் சிகிச்சையும் கொடுக்கப்பட்டது. திருச்சி அரசு பொது மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட உயர் சிகிச்சை பலனின்றி அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
மூத்த மகனை இழந்து சோகத்தில், எதிர்காலத்தின் திசை தெரியாமல், தாய் மல்லிகா பிரேத கிடங்கின் வாசலில் கண்ணீர் விட்டு கதறி துடித்தார். பொழுதுபோக்காக நினைத்து பலர் கடந்து போகிறார்கள். சிலர் மட்டும் துக்கத்தில் தூக்கம் தொலைத்து நிற்கிறார்கள்.
இதேபோல திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கிய பூபாலன் என்பவர் முதலிடம் பிடித்து இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார். இந்த போட்டியில் 62 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி திருச்சி திருவெறும்பூர் பெரிய சூரியூரில் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கிய பெரிய சூரியூரைச் சேர்ந்த பூபாலன் என்பவர் முதல் பரிசை வென்றார். அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 63 பேர் காயமடைந்தனர். அதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த 11 பேரில் பார்வையாளராக வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த் (25) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர் அரவிந்த் என்பவரும் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.