தமிழ்நாடு

“ஈரானில் தவிக்கும் 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை” - அமைச்சர் ஜெய்சங்கர் 

“ஈரானில் தவிக்கும் 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை” - அமைச்சர் ஜெய்சங்கர் 

webteam

ஈரானில் தவிக்கும் இந்தியர்கள் 18 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய அரசு அமீரகத்திலிருந்து சவுதி அரேபியாவிற்கு சென்ற பிரிட்டன் நாட்டு கப்பல் ஒன்றை ஈரான் கடற்படை கடந்த மாதம் சிறைபிடித்தது. இதில் பணியாற்றிய 18 இந்தியர்கள் உட்பட 23 பேரும் ஈரானில் சிறைபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த 27 வயதான ஆதித்யா வாசுதேவன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆதியாவின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இது தொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். அதில் ஈரானில் சிறையில் உள்ள ஆதித்யா வாசுதேவன் உள்ளிட்ட 18 இந்தியர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஈரான் பிடித்து வைத்துள்ள ஸ்டெனோ இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் “ஸ்டெனா இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களையும் விரைவில் விடுவித்து தாயகம் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகின்றோம். இது தொடர்பாக ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றோம். தெஹ்ரானில் உள்ள நமது தூதரக அதிகாரிகள் மாலுமிகளைச் சந்தித்துள்ளனர். அவர்கள் நலமாக இருப்பதாகத் தெரிகிறது” எனத் தமிழில் தெரிவித்துள்ளார்.