சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ளது JAINS WESTMINSTER அடுக்குமாடி குடியிருப்பு வளாகம். கடந்த 2015 ஆம் ஆண்டு சாலிகிராமத்தில் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இதன் பக்கவாட்டு சுவர்களின் பூச்சுகள் உதிர்ந்த வண்ணம் உள்ளது. முதலில் சிறு பிரச்சனை என இருந்த இது, நாளடைவில் அதிகமானதால் குடியிருப்பு வாசிகள் அச்சத்திற்கு ஆளாகினர். வீட்டின் மேற்கூரையின் பூச்சுக்கள் உதிர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் தற்போது கட்டடம் உள்ளது.
இது குறித்து புதிய தலைமுறை கள ஆய்வு மேற்கொண்டது. அப்போது அங்கு வசிப்பவர்களிடமும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கருத்துகளை கேட்டது. அவர்கள் பகிர்ந்து கொண்டவற்றை, இங்கே பார்ப்போம்.
குமார், Association Secretary:
“சொந்த செலவில் சேதமடைந்த பகுதிகளை எல்லாம் சரி செய்து வருகிறோம். பிரச்னை பெரிதானதால் அரசிற்கு தகவல் அளித்துள்ளோம். இங்கு துறை சார் முன்னாள் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களின் வழிகாட்டுதலில் சில விஷயங்களை சரி செய்து வருகிறோம். கட்டடத்தின் தன்மையை ஆய்வு செய்ய ஐஐடி போன்ற அரசு துறைசார் அதிகாரிகள் வேண்டும் என கேட்டுள்ளோம்.
நிறுவனம் இங்கு வேலைகளை ஆரம்பிக்கும் முன் நாங்கள் வேலை செய்துள்ளோம். எங்களது பயம், ஆயிரம் பேரின் உயிர். அதனால் நாங்கள் வசூலித்து 5 கோடி வரை செலவு செய்துள்ளோம். எனவே அதை நிறுவனம் திருப்பி கொடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக அரசுக்கும் கோரிக்கைகளை வைத்துள்ளோம். ஜெயிண்ட்ஸின் அடுத்தடுத்த ப்ராஜெக்டுகளை அரசு அனுமதித்த பிறகே செய்ய வேண்டும்.
குடியிருப்பு வாசி சரவணன்: “ஐந்து வருடமாக இந்த பிரச்னை இருக்கிறது. அசோசியேசன் மூலமாக கேஸ் போட்டு சில பிரச்னைகளை சரிசெய்தோம். இந்த குடியிருப்புகளை மேற்கொண்டு அவர்கள் விற்கவும் முடியாமல் செய்துள்ளோம். அனைவரும் கடன்களை வாங்கித்தான் குடியிருப்புகளை வாங்கியுள்ளோம். மிகச்சிலர் தான் மொத்த பணத்தையும் கொடுத்து வாங்கி இருப்பார்கள்.
இந்த பிரச்னையை அனைத்து பில்டர்களும் அவர்களது பிரச்னையாக எடுக்க வேண்டும். பில்டர்கள் அனைவரும் சேர்ந்து ஜெயிண்ட்ஸ்க்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நாங்கள் குடியிருப்பை வாங்கும் போது இப்பிரச்சனைகள் இல்லை”
குடியிருப்பில் இருந்த பெண்கள் கூறியவை: “தர்ணா செய்தாவது இந்த விவகாரத்தில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நான் 3 வருடங்களாக சொல்லி வருகிறேன். உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னை இது. அரசிடம் இது குறித்து புகாரொன்றும் யாரும் தெரிவிக்கவில்லை. அசோசியேசன் மூலமாகத்தான் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தினோம். அதில் தான் நாங்கள் தவறு செய்துவிட்டோம். ஐஐடியில் இருந்து வந்து கட்டடத்தை ஆய்வு செய்து வாழ தகுதியானதா அல்லது தகுதியற்றதா என்பதை ஆய்வு செய்து சொல்ல வேண்டும்”
AMV பிரபாகர் ராஜா, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்:
“இந்த புகார் கடந்த ஓராண்டுக்கு முன்பே வந்தது. மிகச்சிறிய அளவில் இருந்தது. 5 நாட்களுக்கு முன் இச்சம்பவம் பெரியளவில் நடந்துள்ளது. அப்போது நான் வெளியில் இருந்தேன். மாமன்ற உறுப்பினர் உடனே வந்து பாதிக்கப்பட்டவர்களை ஆணையரிடம் அழைத்துச் சென்று புகார்களை கொடுத்தார். நானும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அமைச்சர்கள் சேகர் பாபுவிற்கும், மா.சுப்ரமணியமிடமும் துறை அதிகாரிகளுக்கும் இது தொடர்பான கடிதங்களை எழுதியுள்ளேன். இது குறித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளேன்.
ஏறத்தாழ 400 பேர் குடியிருக்கிறார்கள். அவர்கள் லோன் வாங்கியிருப்பார்கள். அவர்களுக்கு பல பிரச்னைகள் இருக்கும். அவர்களை வெளியேற்ற முடியாது. அதற்கான அவசியமும் எழவில்லை. கட்டடத்தின் முழுமையான தன்மையை ஆய்வு செய்ய துறைசார் வல்லுநர்களை அமைத்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அரசாக இந்த அரசு இருக்கும். இந்த கட்டடத்தை கட்டிய பில்டர் என்ன நோக்கத்திற்காக அதை கட்டினார் என தெரியாது. ஆனால் கட்டடத்தின் தரம் மோசமாகத்தான் உள்ளது. முழுமையாக ஆய்வு செய்த பின்பு தான் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முழுமையாக தெரிய வரும்”