satha - jafar sadiq pt desk
தமிழ்நாடு

போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதா கைது – யார் இந்த சதா? பின்னணி என்ன?

போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் நண்பர் சதா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சதா குறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்...

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

டெல்லியில் மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைக்கபட்டிருந்த வழக்கில், திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார். மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இவரை கைதுசெய்திருந்தனர்.

இந்த ஜாபர் சாதிக்கின் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள லாஜிஸ்டிக் நிறுவன குடோனை மொத்தமாக நிர்வகித்து வருபவர் தேனாம்பேட்டையை சேர்ந்த சதா. ஜாபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளியான சதா, கடந்த பத்து வருடங்களாக ஜாபர் சாதிக்குடன் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

ஜாபர் சித்திக்

தேங்காய் பவுடர், ராகி பவுடர் போன்றவைகளை வாங்கி அதில் சூடோபெட்ரின் என்ற போதை பொருளை கலந்து அதை பேக்கிங் செய்து அனுப்பும் வேலையை சதா செய்து வந்துள்ளார். கார்கோ மூலமாக எப்படி போதைப்பொருள் செல்ல வேண்டும் என்பதையும் தீர்மானித்து வந்தது சதா என்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை மற்றும் திருச்சியில் இருந்து மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு போதைப் பொருளை கடத்தி வந்ததும் விசாரணை தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சதாவை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.

arrest

ஜாபர் சாதிக்கை போலீஸ் கஸ்ட்டடியில் எடுத்து விசாரணை செய்யும் போது அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சதாவை கைது செய்துள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே சென்னையில், சதா மீது மூன்று போதைப் பொருள் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வரும் முயற்சியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.