தமிழ்நாடு

ஜாக்டோ ஜியோ போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைப்பு

ஜாக்டோ ஜியோ போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைப்பு

webteam

நாளை நடைபெறவிருந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைப்பதாக நீதிமன்றத்தில்  ஜாக்டோ - ஜியோ தகவல் தெரிவித்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டிசம்பர் 4 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பு வெளியிட்டனர்.

இதையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் சென்னையில், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்‌ உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் திட்டமிட்டபடி வரும் 4ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.

டிசம்பர் 6ஆம் தேதிக்குள் முதல்வரே எங்களை அழைத்து பேசினால் ஸ்டிரைக்கை கைவிடுவது பற்றி பரிசீலனை செய்யப்படும் எனவும் பேச்சு நடத்தாவிடில் டிசம்பர் 7 முதல் போராட்டம் தீவிரமடையும் எனவும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்தார்.

இதையடுத்து ஜாக்டோ - ஜியோவினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் இன்று மனுத்தாக்கல் செய்தது.

அந்த மனுவில் கஜா புயல் பாதிப்பு, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் சூழல் உள்ளிட்டவை இந்த போராட்டத்தால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இதையடுத்து இதனை அவசர வழக்காக பிற்பகல் 1 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. 

அப்போது, ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்தை டிசம்பர் 10 வரை தள்ளி வைக்க முடியுமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து நாளை நடைபெறவிருந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைப்பதாக நீதிமன்றத்தில்  ஜாக்டோ - ஜியோ தகவல் தெரிவித்துள்ளது.