தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் கைது !

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் கைது !

webteam

தமிழகம் முழுவதும் கோவை,திருப்பூர்,கடலூர்,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜீயோ கூட்டமைப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

புதிய ஒய்வுதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும் போன்ற 9 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நேற்று முதல் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ-ஜீயோ அமைப்பின் சார்பில்  தமிழகம் முழுவதும் இன்று சாலைமறியல் போராட்டம் நடைப்பெற்று வருகின்றது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 360 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1200 பேரை தாராபுரம் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். அதுபோல கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர் நலச்சங்கம் கூட்டமைப்பு சேர்ந்த 500 க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கோவை மாவட்டம் வால்பாறையில் ஷ்டேன்மோர் முக்கு பகுதியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். பின் அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை அரசு ஊழியர்கள் சங்கத்தினர் சாலை மறியல் செய்தனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின் சாலை மறியல் செய்தவர்களை வேப்பூர் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

அதுபோல கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இன்று 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.