ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயற்சி: ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சென்னையில் கைது!

பழைய ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டி.பி.ஐ வளாகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜாக்டோ- ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

webteam

செய்தியாளர்: ராஜ்குமார்

- 2003 ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஒய்வூதியம் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்,

- பல்வேறு துறைகளில் காலியாக இருக்க பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

- அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளில் தனியார் முகமை மூலம் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும்

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம்

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், சென்னையில் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் டி.பி.ஐ முன்பாக போராட்டத்திற்கு தயாரானவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது தமிழக அரசு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

கோரிக்கைகள் குறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேசும் போது “கடந்த அரசு இருந்தபோது, சில கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தற்போதைய அரசு வாக்குறுதி கொடுத்தும், மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குற்றம்சாட்டினர்.

மேலும் போராட்டம் நடத்த கூட அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அடுத்த மாதம் தொடர்ச்சியாக பல கட்ட போராட்டங்களை நடத்த இருப்பதாக தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்தனர். போராட்டம் காரணமாக துணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.