தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

நிவேதா ஜெகராஜா

'தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்பது வதந்தி' என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், “சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. மந்தாகினி விடுதியில் தங்கியிருந்த மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், ஞாயிற்றுக்கிழமை வரை 60 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில் மேலும் 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை ஐஐடி கல்லூரி வளாகத்தில் 2,057 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சிலருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருக்கிறது. தேவைப்பட்டால் கிண்டி கிங் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இப்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகிறது. இருந்தபோதிலும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்; தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மேற்கொண்டு நோய்ப்பரவல் ஏற்படாமல் நம்மால் தடுக்க முடியும். மற்றபடி கொரோனா மற்றும் ஊரடங்கு தொடர்பான தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.