தமிழ்நாடு

“வாரிசு தீர்ப்பை நாங்களே எதிர்பார்க்கவில்லை” : ஜெ.தீபா

“வாரிசு தீர்ப்பை நாங்களே எதிர்பார்க்கவில்லை” : ஜெ.தீபா

webteam

ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாங்களே எதிர்பார்க்கவில்லை என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என அறிவிக்கப்பட்டது தொடர்பாகச் சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் ஜெ.தீபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசு எங்கள் மீது வீண்பழி சுமத்துகிறது. ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை நாங்களே எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளேன். அதிமுகவினர் உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க உரிய நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோரை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து இன்று தீர்ப்பில் திருத்தம் செய்துள்ள நீதிமன்றம் ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அறிவித்துத் தீர்ப்பளித்துள்ளது. இதற்கிடையே வேதா நிலையத்திற்கு ஜெ.தீபா செல்ல முயற்சிப்பதாகவும், அவ்வாறு அவர் செல்ல முயற்சித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைக்குறிப்பிட்ட நீதிமன்றம், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை வேதா இல்லத்தில் நடைபெறுவதால் அங்கே சென்றால் பிரச்னை வரும் எனத் தீபா தரப்புக்கு அறிவுரை வழங்கினர்.