தமிழ்நாடு

நாளை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு - காரணம் என்ன?

நாளை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு - காரணம் என்ன?

JustinDurai

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பல தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதமாகும் எனத் தெரிகிறது.

கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட பிற்பகலுக்குள் பெரும்பாலான முடிவுகள் தெரிந்துவிட்டன. ஆனால், இம்முறை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஆகலாம் அல்லது கூடுதல் நேரம் பிடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சமூக இடைவெளியை பிற்பற்றும் வகையில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் வழக்கமாக 20 சுற்றுக்குள் எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கை இம்முறை அதிகரித்துள்ளது. சில தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட சுற்றுகள் எண்ணப்படுகின்றன. 234 தொகுதிகளில் அதிகபட்சமாக பல்லாவரம் தொகுதியில் 44 சுற்றுகளும், செங்கல்பட்டு தொகுதியில் 43 சுற்றுகளும் அம்பத்தூர் தொகுதியில் 39 சுற்றுகளும் எண்ணப்பட இருக்கின்றன. இந்த 3 தொகுதிகளின் முடிவுகள் வெளியாக கிட்டத்தட்ட நள்ளிரவை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஓசூர், பூந்தமல்லி தொகுதிகளில் 36 சுற்றுகள் எண்ணப்பட இருக்கின்றன. இவற்றின் முடிவுகள் வெளியாக இரவு 10 மணிக்கு மேல் ஆகும் எனக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக உத்திரமேரூர் தொகுதியில் 13 சுற்றுகளும், சென்னையில் உள்ள கொளத்தூர், பெரம்பூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடாணை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளில் 14 சுற்றுகளும், காஞ்சிபுரம் தொகுதியில் 16 சுற்றுகளும் எண்ணப்படுகின்றன. இதனால் இவைகளின் முடிவுகள் மாலைக்குள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த தொகுதிகளை தவிர்த்து சிங்காநல்லூர், கரூர், கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் தலா 18 சுற்றுகளும், நாகை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் 19 சுற்றுகளும் இருப்பதால் இதன் முடிவுகளும் விரைவாக தெரியவரும். மேலும், 20 சுற்றுகள் கொண்ட தொகுதிகளாக ஆர்.கே.நகர், திருவிக நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, சூலூர், வால்பாறை, வேதாரண்யம், கந்தர்வக்கோட்டை உள்ளதால் இதன் முடிவுகளும் மாலைக்குள் வெளிவர வாய்ப்ப்பிருக்கிறது. இதர தொகுதிகள் அனைத்தும் 20க்கும் மேற்பட்ட சுற்றுகள் இருப்பாதல் அதன் முடிவுகள் வெளியாக இரவை நெருங்கும் என்ற நம்பப்படுகிறது.