தமிழ்நாடு

வருமானவரித்துறை சோதனை: கோடநாடு பங்களாவுக்கு சீல்!

வருமானவரித்துறை சோதனை: கோடநாடு பங்களாவுக்கு சீல்!

webteam

கோடநாடு பங்களாவுக்கு தற்காலிகமாக சீல்வைத்துவிட்டு நாளை மீண்டும் சோதனை நடத்தவுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சசிகலா, ‌டிடிவி தினகரன் குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமானவரித் துறையினர் இன்று சோதனை நடத்தியுள்ளனர். சோதனையில் ஈடுபட வந்த வருமான வரித்துறையினர், சோதனை பற்றிய தகவல் வெளியே கசியாமல் இருப்பதற்காக வாடகைக்கார்களையே பயன்படுத்தினர். வாடகைக்கார்களில் ‘ஸ்ரீனி வெட்ஸ் மகி’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. பார்ப்பவர்களுக்கு திருமண விழாவுக்காக செல்பவர்கள் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. பெரும்பாலான இடங்களில் காலை 6 மணி முதலும், சில இடங்களில் 7 மணி முதலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். 6 வருமான வரித்துறை ஆணையர்கள் தலைமையில், 1800 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு இடத்திலும் பல மணி நேரம் சோதனை நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் சோதனை நிறைவு பெற்ற நிலையில், கோடநாடு பங்களாவுக்கு தற்காலிகமாக சீல்வைத்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் நாளை மீண்டும் அங்கு சோதனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இதேபோன்று மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரன் வீட்டிலும் நாளையும் சோதனை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் உள்ள திவாகரன் ஆதரவாளர் ராசுபிள்ளை வீட்டில் வருமான வரி சோதனை நிறைடவந்துள்ளது. அத்துடன் மன்னார்குடியில் உள்ள டிடிவி தினகரன் வீடு, வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் வடகாட்டில் வெங்கட் என்பவர் வீடு, புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள டிடிவி தினகரனின் பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றுள்ளது.