தமிழ்நாடு

பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் ரூ.65 கோடி பறிமுதல்

பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் ரூ.65 கோடி பறிமுதல்

webteam

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் அலுவலகம், உரிமையாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல், அப்படத்தின் பைனான்சியரான அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகம் என சுமார் 20 இடங்களில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜயின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இந்நிலையில், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் ரூ.50 கோடியும், மதுரையில் ரூ.15 கோடியும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, ஏஜிஎஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.