தமிழ்நாடு

"சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலுக்கு கொண்டுவர திட்டமிட்டு செய்கிறார்கள்" - வைகோ

"சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலுக்கு கொண்டுவர திட்டமிட்டு செய்கிறார்கள்" - வைகோ

kaleelrahman

சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலுக்கு கொண்டுவர திட்டமிட்டு செய்கிறார்கள். தொண்டர்களின் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும் என தனது மகன் அரசியலுக்கு வருவது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நாகலாபுரம் அருகே உள்ள சங்கரலிங்க புரத்தைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி எரிமலை வரதன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மறைந்த எரிமலை வரதன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசும்போது, "பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பெங்களூரில் காவல்துறை அதிகாரியாக இருந்தவர். இன்னும் அதே போலீஸ் பார்வையில்தான் பேசி வருகிறார். அரசியல் கொள்கை பற்றி அவருக்கு தெரியாது.

குஜராத்; அதானி துறைமுகத்திலிருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறித்து பாஜக தலைவர்கள் இதுவரை எந்தஒரு பதிலும் கூறவில்லை என்ற கேள்விக்கு, "இதில் அவர்களே குற்றச்சாட்டில் இருக்கும்போது அவர்கள் எப்படி பதில்கூற முடியும்" என்றார்.

மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, “கடந்த இரண்டு ஆண்டு காலமாக எனக்கே தெரியாமல் கட்சிக்காரர் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி என போய் வந்தார். கட்சியை சேர்ந்தவர்களுக்கு உடல்நலக் குறைவு என தகவல் கேட்டாலும் சென்று வந்தார். சிகிச்சைக்கு உதவி செய்தும் வந்துள்ளார். இது எனக்கு தெரியாது. அதன்பின்னர் எனக்கு தெரியாமலே திருமண வீடுகளில் அவரது படத்தை சுவரொட்டிகள் போடக்கூடாது என அவர்களிடம் சொன்னேன் மாநாட்டு பந்தலில் அவர் படம் போடக்கூடாது என கூறினேன்.

அப்படி போடப்பட்டிருந்ததை அகற்றச் சொல்லியும் இருக்கிறேன். இதே செயலில் நிர்வாகிகள் ஈடுபட்டால் கட்சியை விட்டு நீக்கவும் தயங்க மாட்டேன் எனக் கூறினேன். நான் அவரை ஊக்குவிக்கவில்லை. சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலில் புகுத்துகின்றனர். சிலர் அவர்களை கொண்டு வரவேண்டும் என்று அரசியலில் திட்டமிட்டு செய்கிறார்கள்.

நான் அவரை ஊக்குவிக்கவில்லை.  அதே நேரத்தில் வந்து விடக்கூடாது என்று தடுப்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சித்துப் பார்த்தேன். அதை மீறி இப்போது காரியங்கள் நடக்கின்றன. என்னை மீறி தொண்டர்கள் எங்களுக்கு வழிகாட்ட நல்ல ஒரு வழிகாட்டி வேண்டும். அதற்கு எல்லா தகுதியும் துரை வையாபுரியிடம் இருக்கு என அழைத்துக் கொண்டு போகின்றனர். இக்கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும்” என்றார்.

ஜனநாயக முறைப்படி கட்சியில் துரை வையாபுரி தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்விக்கு. “யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. அதை நிராகரிக்கவும் முடியும்” எனக் கூறினார்.