தமிழ்நாடு

குறைந்த விலைக்கு பாலை பெற்று ஆவினில் விலையேற்றி விற்பது வருத்தமளிக்கிறது- உற்பத்தியாளர்கள்

குறைந்த விலைக்கு பாலை பெற்று ஆவினில் விலையேற்றி விற்பது வருத்தமளிக்கிறது- உற்பத்தியாளர்கள்

webteam

குறைந்த விலையில் பாலைப் பெற்றுக்கொண்டு அதன் உப பொருட்களின் விலையை உயர்த்தி விற்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ள பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தியுள்ளனர்.

உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலாவது இடத்திலும், இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன. இருப்பினும், தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்து வரும் விவசாயிகளின் நிலை மிக மோசமாக இருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. பால் உற்பத்திக்கானச் செலவு அதிகரித்துள்ள போதிலும் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை என்று மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.



“பால் உப பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்துவிட்டது. ஆனால் பால் கொள்முதல் விலை ஒரு ரூபாய் கூட உயர்த்தப்படவில்லை. பால் கொள்முதல் விலை நீண்டகாலமாக உயர்த்தப்படாமல் இருப்பதால் தங்களது வாழ்வாதாரம் மேம்படவே இல்லை” என்று மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத்தின் வெண்மணி சந்திரன் வேதனையுடன் தெரிவித்தார். பசும்பாலுக்கு கொள்முதல் விலையாக லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பாலுக்கு கொள்முதல் விலையாக லிட்டருக்கு ரூ.50-ம் வழங்க வேண்டும் என்று கருமாத்தூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் முத்துப்பாண்டி தெரிவித்தார்.


நாளொன்றுக்கு 50 லிட்டர் பால் உற்பத்தி செய்கிறோம். செலவும், உழைப்பும் அதிகம்; ஆனால் எங்களுக்கு போதிய வருமானம் இல்லை என்று வருத்த்துடன் குறிப்பிட்டார் பால் விவசாயி சரண்யா தர்மராஜ். ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு 45 ரூபாய் வரை செலவாகிறது என்றும், அதைவிட 50 விழுக்காடு உயர்த்தி வழங்க வேண்டும் என எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த அறிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும் விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரம் உயருமென தெரிவிக்கும் விவசாயிகள் வரும் தீபாவளிக்குள் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.