Karthi Chidambaram MP pt desk
தமிழ்நாடு

தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது - கார்த்தி சிதம்பரம்

webteam

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...

“மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மோடி பிரசாரத்திற்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு எங்களுடன் ஒத்துழைக்கவில்லை என்று மேலோட்டமாக கூறினார். எந்த திட்டத்தில் ஒத்துழைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

Annamalai

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தலுக்கு முன்பு ஒன்று கூறுகிறார், தேர்தலுக்கு பின்னால் ஒன்று கூறுகிறார். அதனால் அவர் கூறுவது எனக்கு தெரியவில்லை. புரியவில்லை. மேலோட்டமாக வைக்கப்படும் விமர்சனங்கள் தமிழ்நாடு அரசு எந்த வகையில் ஒத்துழைப்பு தரவில்லை என்பதை கூற வேண்டும். எந்த நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அதை செலவு செய்யவில்லை என்று ஆதாரப்பூர்வமாக அவர் சொன்னால் பதில் சொல்லலாம்.

கல்விக் கடன் வாங்கியவர்கள் கொரோனா காலத்தில் அந்த கடனை கட்ட முடியாமல் தவித்தார்கள். அதனால் அந்தக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தோம். அந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. மதிய உணவு திட்டத்திற்கும் காலை உணவுத் திட்டத்திற்கும் நிதி கேட்டிருந்தோம். பட்டினி பட்டியலில் 110 வது இடத்தில் இந்தியா உள்ளது. அதனால், பள்ளிக்கூடம் மூலமாக உணவு உண்ணும் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதை குறைத்து இருக்கிறார்கள்.

tamilisai

தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சௌரியமாக தெலுங்கானாவில் ஆளுநராக இருந்தவரை அண்ணாமலையின் சித்து விளையாட்டால் பலிகாட ஆக்கப்பட்டார். இன்று மீண்டும் ஆளுநர் அறிவிப்பின்போது தமிழிசை சௌந்தரராஜன் பெயர் இல்லாததைக் கண்டு வருத்தம் அடைகிறேன்.

யாரை அமைச்சராக்க வேண்டும். யாருக்கு பதவி உயர்வு தர வேண்டும். யாரை நீக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் முழு உரிமை. மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம்? யாரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதேபோல் பிரதமருக்கும் அந்த உரிமை உள்ளது. ஆனால், தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது” என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.