vijay File image
தமிழ்நாடு

சுட்டெரிக்கும் சூரியனைவிட சூட்டைக் கிளப்பும் அரசியல்! பொதுத்தேர்வு Toppers-ஐ சந்திக்கிறாரா விஜய்?

இளம் தலைமுறை வாக்காளர்களை கவரும் நோக்கில் நடிகர் விஜய் ஜூன் 18ஆம் தேதி மாணவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

webteam

தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. நடிகர் ரஜினிகாந்துக்கு பிறகு நடிகர் விஜய் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பல மாவட்டங்களில் வெற்றி பெற்றனர். அதன்பிறகு அவர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். இதனால் விரைவில் நடிகர் விஜய் அரசியலில் எண்ட்ரி கொடுக்கலாம் என்ற தகவல்கள் பரவி வந்தன.

Vijay Poster, Madurai

இந்நிலையில் அதற்கு வலு சேர்க்கும் வகையில், ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதோடு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளிடம் தொகுதி வாரியாக முக்கிய தரவுகளை கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actor vijay

குறிப்பாக, ஒவ்வொரு தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த 5 தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள், அவர்கள் சார்ந்த கட்சிகள், அவர்கள் பெற்ற ஓட்டுகள், தொகுதியின் 10 முக்கிய இடங்கள் உள்பட பல்வேறு விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இதில், இளம் தலைமுறை வாக்காளர்களை குறித்து புள்ளி விவரங்களும் கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இளம் தலைமுறை வாக்காளர்களை கவர, தற்போது பிளஸ் 2, 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடி அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளார் விஜய் என சொல்லப்படுகிறது. மாவட்ட வாரியாக அல்லாமல், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவிகளை சென்னைக்கு வரவழைத்து சந்தித்து பேச நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார்.

Actor Vijay

தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நகல், 'ஆதார்' அட்டை நகல், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை நகல், செல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் சேகரித்து ரசிகர் மன்ற தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வருகின்றனர்

இதனைத் தொடர்ந்து, வரும் ஜூன் முதல் வாரத்திலோ அல்லது 18 ஆம் தேதியோ நடிகர் விஜய் மாணவர்களை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.