தமிழ்நாடு

ஆளுநர் உரையில் எல்லாமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல - திமுக எம்.பி கனிமொழி

ஆளுநர் உரையில் எல்லாமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல - திமுக எம்.பி கனிமொழி

kaleelrahman

ஆளுநர் உரையில் எல்லாமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட அதனை செய்து கொண்டு இருப்பதை பாராட்ட முடிந்தால் நல்ல விஷயம் தான் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு திமுக கனிமொழி எம்.பி பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள முடுக்குமீண்டான்பட்டியில் உள்ள ஆக்டிவ் மைண்டஸ் மன நலகாப்பகத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த எம்பி கனிமொழி, “ஆளுநர் உரையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முழுவதுமாக சொல்லக்கூடிய வாய்ப்பு இருக்காது, தேர்தலின் போது மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்கறுதிகள் ஒவ்வென்றாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான், ஆளுநர் உரையில் எல்லாமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட அதனை செய்து கொண்டு இருப்பதை பாராட்ட முடிந்தால் நல்ல விஷயம் தான்” என்றார்

இந்து அறநிலையத் துறையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு நடவடிக்கை எடுத்து வரும் போது, மற்ற மதங்களை சேர்ந்தவர்கள் செய்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா என்ற கேள்விக்கு, “இந்து அறநிலையத்துறை தமிழ்நாடு அரசின் கீழ் வருகிறது. அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றி வருகிறது. அரசிடம் என்ன இருக்கிறதோ அதில் தான் அரசு நேரிடையாக தலையீட்டு செய்ய முடியும், மற்ற இடங்களில் பிரச்னைகள் இருந்தால் அதனை சரி செய்வதற்கும் அரசு முன்வரும்” என்றார் கனிமொழி.