தமிழ்நாடு

‘கரையில் பிறந்து.. கடலில் மிதந்து’-மீன்பிடிதடை காலமும்.. மீனவர்களின் கண்ணீர் வாழ்க்கையும்!

‘கரையில் பிறந்து.. கடலில் மிதந்து’-மீன்பிடிதடை காலமும்.. மீனவர்களின் கண்ணீர் வாழ்க்கையும்!

JustinDurai

கரையில் பிறந்து, கடலில் மிதந்து, கண்ணீரோடு வாழ்வை நகர்த்தி வரும் மீனவர்களின் துயரமான வாழ்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களால் பல ஆண்டுகளாக பெரும் பாதிப்பை சந்தித்து வரும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள மீன் பிடி தடைக் காலம் மேலும் வேதனையை கொடுத்திருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; படகுகளின் பராமரிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும்; இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்டவை மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

பலதரப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பால் தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது நிதர்சனம் என்றாலும், அதிலும் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வில் இன்னும் வறுமை குடி கொண்டிருப்பது வேதனையான ஒன்று. மீன் பிடியையும், மீன்பிடித் தொழிலையும் மட்டுமே நம்பி வாழும் அப்படிப்பட்ட மீனவர்களின் வாழ்வில் தற்போது மேலும் சுமையை கொடுத்துள்ளது 61 நாட்கள் நடைமுறையில் இருக்கும் மீன்பிடித் தடைக் காலம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டிணம், கோட்டைப்பட்டிணம் ஆகிய இரண்டு விசைப்படகு மீன்பிடி தளங்களும், கட்டுமாவடியில் தொடங்கி ஏனாதி வரை 32 கடலோர நாட்டுப்படகு மீனவர் கிராமங்களும் உள்ளன. இம்மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை நம்பியும் சார்ந்தும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2009 ஆண்டுக்கு பின்னர் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களாலும், டீசல் விலை உயர்வாலும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம், கடலுக்கு சென்று திரும்பினால் மட்டுமே உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் என்ற சூழலை உள்ளாகியுள்ளது.

இம்மாவட்டத்தில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது விசைப் படகுகளை இலங்கை கடற்படையினரிடம் பறிகொடுத்து விட்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் பரிதாபமாக வயிற்றுப் பிழைப்பிற்கே வழியின்றி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தான் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக் காலம் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி வரை 61 நாட்கள் நீடிக்கிறது.

ஏற்கனவே கடலுக்குச் சென்று திரும்பினால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்வை நகர்த்தி வந்த இம் மாவட்ட மீனவர்களுக்கு இந்த மீன்பிடி தடை காலம் என்பது வயிற்றுப் பிழைப்பிற்கு உத்தரவாதம் இல்லாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. அரசு ஏற்கனவே வழங்கி வந்த 5,000 ரூபாய் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவாதம் அளித்து இருந்தாலும் அது இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என வேதனையோடு கூறுகின்றனர் மாவட்ட மீனவர்கள்.

அப்படியே 8 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கினாலும் அது இந்த 61 நாட்களுக்கு தங்கள் வயிற்றுப் பசியைப் போக்க வழி வகை செய்யாது என்றும், மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை 15 ஆயிரம் ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், அதேபோல் மீன்பிடித் தடைக் காலத்தில் படகுகளின் பராமரிப்பு செலவு தொகையை அரசே ஏற்க வேண்டும் எனவும், டீசல் மானியத்தை உயர்த்தி வழங்குவதோடு இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களுக்கு  முற்றுப்புள்ளி வைத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் கண்ணீரோடு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினம் தினம் கடலில் கண்ணீர் துளிகளை கரைத்து, வேர்வை சிந்தி உழைத்து அதன் மூலம் வரும் வருமானத்தில் வறுமையில் வாழ்வை நகர்த்தி வரும் மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும், மீன்பிடி தடை காலத்தில் அவர்களின் வயிற்றுப் பசியை போக்க  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மீனவ தொழிலாளர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக இந்தத் தொழிலாளர் தினத்தில் ஓங்கி ஒலிக்கிறது. இதற்கு அரசிடமிருந்து நல்ல அறிவிப்பு வரும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது..

இதையும் படிக்கலாம்: ஆப்பிரிக்க இளம்பெண்ணை தமிழர் பாரம்பரியப்படி மணம்புரிந்த கோவை இளைஞர்