தமிழ்நாடு

கந்துவட்டி கொடுமையால் வீடுஅபகரிப்பு?- குடும்பத்துடன் சாலையில் வசிக்கும் மிக்சர் கடைக்காரர்

kaleelrahman

மதுரவாயலில் 22 லட்சம் ரூபாய் கடனுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அபகரிக்க முயற்சி செய்வதாகவும், அடியாட்களை வைத்து தாக்கி ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியேற்றியதால் தங்க இடமின்றி குடும்பத்துடன் சாலையில் சுற்றித்திரிவதாக மிக்சர் கடைக்காரர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

குன்றத்தூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி சுரேஷ் (37). இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரவாயல் பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி வீடுகட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். மிச்சர் கடை நடத்தி வரும் இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு கந்து வட்டி சிகாமணி என்பவரிடம் வீட்டு பத்திரத்தை கொடுத்து சிறுக சிறுக ரூ. 22 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேல் தொழில் சரிவர இல்லாததால் வட்டியை சரியாக கட்ட முடியவில்லை. இதனால், கடன் வட்டியுடன் சேர்த்து ரூபாய் 38 லட்சம் வருவதாகவும், இதுவரை அந்த கடனை கொடுக்காத காரணத்தால் வீட்டிற்குள் புகுந்து தங்களை வீட்டிலிருந்து அடித்து வெளியே துரத்தி விட்டு வீட்டை பூட்டி சென்றுவிட்டதாகவும் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள வீட்டை தனக்கு விற்று விடும்படி மிரட்டி வருவதாகவும் சிகாமணி மீது மதுரவாயல் போலீசில் அந்தோணி சுரேஷ் புகார் அளித்தார். ஆனால் போலீசார் இந்த புகாரை ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

’’22 லட்சம் ரூபாய் கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 38 லட்சம் ரூபாய் கேட்கிறார் சிகாமணி. வீட்டை விற்று பணத்தை தருவதாக தெரிவித்தும் தனது வீட்டை விற்க சிகாமணி தடைசெய்து வந்தார். தற்போது ஊரடங்கு நேரத்தில் தங்களை குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். எங்களுக்கு தங்க இடமின்றி மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சாலையோரத்தில் இருக்கிறோம். இதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ’’ என்று அவர்  கோரிக்கை வைத்துள்ளார்.

22 லட்சம் கடனுக்கு ரூபாய் 38 லட்சம் வட்டியுடன் கொடுக்காததால், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அபகரிக்க முயற்சி செய்து வீட்டின் உரிமையாளரை குடும்பத்துடன் வீட்டிலிருந்து வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.