தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் பதவியில் இருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ள நிலையில் அரசின் தலைமை வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விஜய் நாராயண் விலகியுள்ளார். இதையடுத்து திமுக சட்டத்துறை தலைவராக இருக்கும் சண்முகசுந்தரம், தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தலைமை வழக்கறிஞரிடம் சட்டரீதியாக ஆலோசனை பெற்ற பிறகே மாநில அரசு பல்வேறு முடிவுகளை எடுப்பது வழக்கம். வரும் 7-ம் தேதி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றப் பின் சண்முகசுந்தரம் தேர்வு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் எனத் தெரிகிறது.