செய்தியாளர்: N.ஜான்சன்
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் விண்வெளியில் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்...
ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் ஊரகப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விண்வெளி மற்றும் சந்திரயான் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று உதகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இஸ்ரோ சார்பில் ரிமோட் சென்சிங், தகவல் தொடர்பு, வானிலை மற்றும் ஜிபிஆர்எஸ், செவ்வாய் கிரகம், சூரியன் ஆகியவற்றை ஆய்வு செய்ய விண்கலங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
அறிவியல் சார்ந்த செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் பெறப்படும் தகவல்கள் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2040 ஆம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவேற்றப்படும். சந்திரயான் மூன்று செயற்கைக்கோள் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டது. அந்த செயற்கைக்கோள் எந்த நோக்கத்திற்காக விண்ணில் செலுத்தப்பட்டதோ அந்த நோக்கம் வெற்றி அடைந்ததாக கூறினார்.