சுய தனிமைப்படுத்தலை கொரோனாவிலிருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கையாக நினைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் மக்கள் வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பது குறித்து நீதிபதி ஏ.பி சாஹி கடிதம் எழுதியுள்ளார். அதில், அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கையை போராடி மீட்க வேண்டும் என்கிற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கூறியதையும், நாடு உனக்கு என்ன செய்தது என கேட்காமல், நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என கேட்க வேண்டும் என்கிற அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி கூறியதையும் மேற்கோள் காட்டியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மீண்டு வருவதற்கு உறுதியேற்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனவில் கூட காண முடியாத சவாலான நிலையை எதிர்கொண்டு இருக்கிறோம் என்றும், இதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் மேலும், இன்று போல நாளையும் அச்சுமூட்டும் வகையில் சூழல் மாற வாய்ப்புள்ளதால், சுற்றுசூழலை சுத்தமாக வைத்துகொள்ளும் பணியில் இறங்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார். சமூக இடைவெளியை போதிப்பதோடு நிறுத்தாமல், அனைவரும் உண்மையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சமூக இடைவெளியை கையாள்வது விகாரமாக இருந்தாலும், மற்றவர்களின் நலனுக்காக அதை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசின் சுய தனிமைப்படுத்தல் உத்தரவு, சிறை வாசம் என்றோ கூண்டில் அடைக்கப்படுவதாகவோ கருதாமல், கொரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை என எண்ண வேண்டும் என்றும் கேடுக்கொண்டுள்ளார். மேலும், விடியும் பொழுது நமக்கு வெற்றி தருவதாக அமையட்டும் என்றும் தலைமை நீதிபதி தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.