தருமபுரி அருகே வார்டு வரையறையில், குளறுபடிகள் நடந்துள்ளதால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக இஸ்லாமிய மக்கள் முடிவு செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் உள்ள 18 வார்டுகளில், 5 வார்டுகளில் இஸ்லாமிய மக்கள் அதிக அளவில் உள்ளனர். கடந்த கால உள்ளாட்சி தேர்தல்களில் இந்த 5 வார்டுகளில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்தான் உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றி பெற்று வந்தனர். ஆனால் தற்போது வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் இஸ்லாமிய சமுதாய மக்கள் அதிகம் உள்ள வார்டுகளை தனித்தனியாக பிரித்து, வார்டுக்கு மாற்றியமைக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அவர்களுக்கான வாக்களிக்கும் வாக்குச்சாவடி வேறு இடத்திற்கு மாற்றியதாகவும் புகார் எழுந்தள்ளது. இதனால், தங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வார்டு வரையறையை பழைய முறைக்கு மாற்றவில்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம் எனவும் அப்பகுதி இஸ்லாமிய மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து ஜம்மாத் சார்பில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துனர். மேலும் இதற்கு உரிய நடவடிக்கையை மாநில, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் எடுக்காவிட்டால், தங்களுக்கு அரசு வழங்கியுள்ள, ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்பி அரசிடம் ஒப்பகைத்து விடுவோம் எனவும் தெரிவித்தனர்.