தமிழ்நாடு

3 ரூபாய்க்கு 14 வகையான மரக்கன்றுகள் - விவசாயிகளுக்கு வழங்க ஈஷா நர்சரி முடிவு

3 ரூபாய்க்கு 14 வகையான மரக்கன்றுகள் - விவசாயிகளுக்கு வழங்க ஈஷா நர்சரி முடிவு

webteam

கடந்த 25 நாட்களில் மட்டும் ஈஷா நர்சரிகளில் இருந்து 3,60,043 மரக்கன்றுகளை விவசாயிகள் வாங்கியுள்ளதாக ஈஷா யோக மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வின் எதிரொலியாக ஊரடங்கு காலத்தில் கூட 3 லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் வாங்கி விளைநிலங்களில் நட்டுள்ளதாக ஈஷா யோக மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் விவசாயிகளில் ஒரு தரப்பினர் விளைப்பொருட்களை விற்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால், மற்றொரு தரப்பு விவசாயிகளோ தங்கள் நிலங்களில் விலைமதிப்புமிக்க மரங்களை நடும் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த ஜூன் 5 முதல் ஜூன் 30 வரையிலான 25 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள ஈஷா நர்சரிகளில் இருந்து 3,60,043 மரக்கன்றுகளை விவசாயிகள் எடுத்து தங்கள் நிலங்களில் நட்டுள்ளதாக ஈஷா யோக மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், விவசாயிகளின் நலன் கருதியும் தேக்கு, செம்மரம், சந்தனம் உள்ளிட்ட 14 வகையான விலைமதிப்புமிக்க டிம்பர் மரக்கன்றுகளை வெறும் 3 ரூபாய்க்கு ஈஷா நர்சரி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது பருவமழை காலம் என்பதால் மரங்கள் நடுவதற்கு இதுவே சிறந்த காலமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 32 இடங்களில் ஈஷா நர்சரிகள் இயங்கி வரும் நிலையில் அங்கு மரங்கள் நடுவது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என ஈஷா யோக மையம் தெரிவித்துள்ளது.