RN.Ravi VK.Singh pt desk
தமிழ்நாடு

தமிழ்நாடு ஆளுநர் ஆகிறாரா வி.கே.சிங்... ஆர்.என்.ரவி மாற்றப்படுகிறாரா? - நடப்பது என்ன?.., முழு விபரம்!

தமிழக ஆளுநர் ஆர்என்.ரவியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய அமைச்சர் விகே.சிங் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதை ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இரா.செந்தில் கரிகாலன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்ரவியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் வேறு மாதிரியான தகவல்கள் சொல்லப்படுகின்றன. தமிழ்நாடு ஆளுநர் மாற்றம் இருக்கிறதா, இல்லையா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்....

Governor RN Ravi

மத்திய உளவுத் துறை அதிகாரியாக பணியாற்றிய ஆர்என். ரவி ஐ.பி.எஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு இரண்டாண்டுகள் பணியாற்றிய நிலையில், தமிழக ஆளுநராக கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி; நியமிக்கப்பட்டார். நாகலாந்து மாநிலத்தில் இரண்டு ஆண்டுகள், தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகள் என அவருடைய ஐந்தாண்டு பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதியோடு முடிவடைந்தது.

ஐந்தாண்டு முடிந்ததும் ஆளுநரின் பதவி காலாவதியாகாது!

தன்னுடைய பதவிக்காலம் நீட்டிப்பது குறித்து பேசுவதற்காகவே ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார் என அவரின் டெல்லி பயணம் குறித்துச் சொல்லப்பட்டது. ஆனால், ஆளுநரின் பதவிக்காலம் முடிந்து மூன்று மாதங்கள் ஆன பிறகும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அரசியல் சாசனத்தின் 156-வது விதியின்படி, ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து ஐந்தாண்டுகள் பதவியில் இருக்கலாம். ஆனால், ஐந்தாண்டு முடிந்ததும் அவரது பதவி காலாவதியாகாது. ஏனென்றால், அடுத்த ஆளுநரை ஜனாதிபதி நியமிக்கும் வரை, இவரே அந்த பொறுப்பில் தொடர்வார் என்று அந்த விதி கூறுகிறது.

RN Ravi

மத்தியில் பாஜக ஆட்சியே தொடர்ந்ததால் ஆளுநர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்யவில்லை:

பெரும்பாலும் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு ஆளுநர்கள் மாற்றப்படுவது வழக்கம். ஆனால், ஐந்தாண்டு முடிவதற்குள் ஒருவரை மாற்ற சட்டத்தில் இடமில்லை. அதேவேளை ஆட்சி மாற்றம் நிகழும்போது ஆளுநர்கள் ராஜினாமா செய்வது வழக்கம். மத்தியில் பாஜக ஆட்சியே தொடர்ந்ததால், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பல ஆளுநர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்யவில்லை. அந்த வகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோர் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.

ஆளுநர் மாற்றம் தற்போது நிச்சயமாக இல்லை:

இதையடுத்து பதவிக்காலம் முடிந்த ஆளுநர்களும் கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட ஆளுநர்கள் மாற்றப்பட இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட இருக்கிறாரா என்பது குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்தோம். ஆளுநர் மாற்றம் தற்போது நிச்சயமாக இல்லை. 2016-ல் அஸ்ஸாமின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோகித்தின் பதவிக்காலம், தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்தபோது கடந்த 2021-ம் ஆண்டில் முடிவடைந்தது. ஆனால், அவர் தொடர்ந்து, பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

VK.Singh

அதேபோல, ஆளுநர் ஆர்.என் ரவியின் பதவிக்காலமும் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை மாற்றம் இருந்தாலும் அது தற்போது இல்லை என்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும் என்று தெரிவித்தனர்.