திருமாவளவன் - எடப்பாடி பழனிசாமி கோப்புப்படம்
தமிழ்நாடு

அதிமுகவுக்கு விசிக அழைப்பு: கூட்டணிக்கான அச்சாரமா? - கடந்தகால வரலாறு என்ன?

“விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம்” என திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. என்ன காரணம்? விரிவாக பார்க்கலாம்....

இரா.செந்தில் கரிகாலன்

“மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்கவேண்டிய தேவை இருக்கிறது. மதவாத, சாதியவாத சக்திகளை தவிர யார் வேண்டுமானாலும் எங்களுடன் பங்கேற்கலாம். அதிமுக கூட பங்கேற்கலாம்’’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கும் கருத்து தமிழக அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. இது, 2026-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Thirumavalavan, EPS

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...

“அக்டோபர் 2ம் தேதி விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கள்ளச் சாராயத்தால் 2006-2024 காலகட்டத்தில் 1,589 பேர் பலியாகியுள்ளனர். மரக்காணம் அருகே கடந்த ஆண்டு கள்ளச் சாராயத்தால் 14 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதன் பின்னர் கள்ளக்குறிச்சியில் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுக்கடைகளை முற்றாக ஒழித்தால் மட்டும் சாவுகளை தடுக்க முடியும்:

பாதிக்கப்பட்ட மக்களை களத்தில் சந்தித்தபோது, அரசு இழப்பீட்டை விட மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றே கோரிக்கை வைத்தனர். மதுக்கடைகளை முற்றாக ஒழித்தால் மட்டும் சாவுகளை தடுக்க முடியும் என கண்ணீர் மல்க அவர்கள் கோரிக்கை வைத்தனர். மதுவிலக்கு கொள்கையை உயிர் மூச்சாக கொண்டிருந்தவர் காந்தி. அரசியல் ரீதியாக அவரோடு கொள்கை முரண் இருந்தாலும் மதுவிலக்கு, மதச்சார்பின்மை போன்ற கொள்கைகளில் உடன்படுகிறோம். அந்த வகையில் அவரின் பிறந்த தினமான அக்டோபர் இரண்டாம் தேதி, கள்ளக்குறிச்சியில் மாநாட்டை நடத்துகிறோம். அதற்கு உங்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை’’ என்று பேசினார்.

Kallakurichi

அதிமுக எங்களோடு இணையலாம் திருமாவளவன் அழைப்பு:

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்... “அதிமுக கூட எங்களோடு இணையலாம். மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்கவேண்டிய தேவை இருக்கிறது. மதாவாத, சாதியவாத சக்திகளை தவிர யார் வேண்டுமானாலும் எங்களுடன் பங்கேற்கலாம்” எனப் பதிலளித்திருந்தார். இந்தக் கருத்துதான் தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. அதிலும், “ஒவ்வொரு குடும்பத்திலும் குடி நோயாளிகளை உருவாக்கிவிட்டு நலத்திட்டங்கள் வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை’’ என திருமாவளவன் பேசியிருப்பது ஆளும் திமுக அரசின் மீதான விமர்சனமாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கு வாய்ப்பா?

“இதைத் தேர்தல் ரீதியாக அணுகத் தேவையில்லை என திருமாவளவன் கூறியிருந்தாலும், கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடத்தியபோது அதிமுகவுக்கு அழைப்பு விடுக்காத விசிக தற்போது அழைப்பு விடுத்திருப்பதை 2026 தேர்தல் கூட்டணியோடும் பொருத்திப் பார்க்கலாம். அதற்கான தொடக்கப் புள்ளியாக பார்க்கலாம்’’ என்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த காலத்தில் அதிமுக - விசிக கூட்டணி குறித்து பார்க்கலாம்...

EPS

கடந்தகால வரலாறு என்ன?

அதிமுகவுடன் 2006 தேர்தலில் கூட்டணி வைத்தது விசிக. அந்தக் கட்சிக்கு ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்போது தனிச் சின்னத்தில் போட்டியிட்ட விசிக, இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. கட்சியின் தலைவர் திருமாவளவனும் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர். அந்த ஒரு தேர்தலைத் தவிர, அதிமுகவுடன் எந்தத் தேர்தலிலும் விசிக கூட்டணி வைக்கவில்லை. விசிக பெரும்பாலும் திமுக கூட்டணியில்தான் அங்கம் வகித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.