தமிழ்நாடு

திருவாரூர் தேர்தலை தள்ளி வைக்க அதிக வாய்ப்பு - முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சிறப்பு பேட்டி

webteam

தமிழக அரசியலில் திருவாரூர் இடைத்தேர்தல்கள் அறிவிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி தேதி நடைபெறும் என அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் அறிவிக்கும் பணியில் மும்முரம் காட்டின. திமுக சார்பில் பூண்டி கலைவானன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் அமமுக சார்பில் கமராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதவிர நாம் தமிழர் கட்சியும் தங்கள் வேட்பாளரை அறிவித்துள்ளது. ஆனால் தேர்தல் நடைபெறுவதில் சில சர்ச்சைகள் எழுந்தன. ஏன்? மற்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்தாமல் திமுக தொகுதியான திருவாரூருக்கு தேர்தல் நடத்துவது ஏன்? என கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இது ஆளும் கட்சியின் மறைமுக வேலை என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. ஆனால் ஆளும் கட்சியே தேர்தலை பின்னர் நடத்தலாம் எனக்கூறியுள்ளது. திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிமுக, திமுக, சிபிஎம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது, கஜா புயல் நிவாரணப் பணிகள் நிறைவடைந்த பிறகு இடைத்தேர்தலை நடத்தலாம் என கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக, திமுக, சிபிஎம் கட்சிகள் வலியுறுத்தின. இதிலிருந்து அதிமுகவும், திமுகவும் கூட இந்த தேர்தல் தற்போது நடத்தப்படுவதை விரும்பவில்லை என்பதை உறுதிசெய்துள்ளது. 

அப்படியே இந்த தேர்தல் நிறுத்தப்படுமென்றால் அதற்கான சாத்தியங்கள் என்ன என்பது தொடர்பாக ஓய்வுபெற்ற தேர்தல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொண்டு புதிய தலைமுறை இணையதளம் சார்பில் கேட்டோம், “திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்புள்ளது. பொதுவாக தேர்தலை தள்ளிவைக்க பல காரணங்கள் இருக்கும். பேரிடர், வாக்களிக்க முடியா சூழ்நிலை, தேர்தல் முறைகேடுகள், வேட்பாளர் மறைவு உள்ளிட்டை போல. அது தவிர அனைத்து கட்சிகளும் முக்கிய காரணத்தை வலியுறுத்தி தீவிரமான கோரிக்கையை முன்வைத்தால் தள்ளி வைக்க வாய்ப்புண்டு” என்று அவர் பதிலளித்தார்.

பின்னர் முன்னாள் தேர்தல் அதிகாரி கோபால்சாமியிடம் கேட்டோம், அவர் கூறும்போது, “இத்தனை தொகுதிகள் இருக்கும்போது இதற்கும் மட்டும் தேர்தல் வைப்பதற்கான காரணம் தெரியவில்லை. அதனை தேர்தல் ஆணையரே விளக்க வேண்டும். அனைத்து கட்சிகளும் முக்கிய காரணத்துடன் கோரிக்கை முன்வைத்தால், தேர்தல் கட்டாயம் தள்ளிவைக்கப்படலாம். ஆனால் முறையான காரணங்கள் இல்லாத பட்சத்தில் தேர்தல் நடத்தப்படும். இறுதி நேரத்தில் நீதிமன்றம் கூறும் தீர்ப்புகளை பொறுத்தும் தேர்தல் நடத்தப்படலாம்” என்றார். 

இதற்கிடையே திருவாரூர் தேர்தல் நடக்குமா? நடக்கதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதலளித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “நடந்தாலும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். எல்லா கட்சிகளும் தேர்தல் வேண்டாம் என்று தான் நினைக்கின்றார்கள். திமுக-வே வேண்டாம் என நினைக்கிறார்கள். தாங்கள் பலமாக இருக்கிறோம் என்று சொல்லிக்கொல்லும் திமுக திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க தயங்குகிறது. இதில் எங்களுக்கு ஒன்றுமில்லை. அதேசமயம் நிவாரணப் பணிகளையெல்லாம் முடித்துவிட்டு தேர்தலை சந்தித்தால், நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் எங்களுக்கும் இருக்கிறது” என்றார். இதற்கு முன்னரே ஆர்.கே இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டபோது, தமிழிசை தள்ளி வைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது கூட திருவாரூரில் தேர்தல் விதிகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டியதாக அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் மீது 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.