செய்தியாளர்: புனிதா பாலாஜி
விஜய்யின் 69-வது படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள தீபத்தையும், தேமுதிகவின் அடையாளத்தையும் இணைத்து, இணையத்தில் புது தகவல்கள் பேசுபொருளாகியுள்ளன.
விஜய் முன்னெடுக்கும் அரசியல் குறித்து முழுமையாகத் தெரியாத நிலையில், அவர் விஜயகாந்தின் வழியை பின்பற்றுகிறாரா என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்... கட்சி தொடங்கி கொடியையும் அறிமுகம் செய்துவிட்டார்..
விரைவில், பிரம்மாண்ட மாநாடும் நடக்க இருக்கிறது... விஜய் முன்னெடுக்கப்போகும் அரசியல் எது என்ற கேள்விகள் விவாதத்துக்குள்ளான நிலையில், கட்சியின் கொடி பாடலில் அண்ணாவையும், எம்ஜிஆரையும் இடம்பெறச்செய்தார்.
தற்போது, அதில் விஜயகாந்தும் இணைகிறாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது, விஜய்யின் 69-ஆவது படத்தின் 1ST LOOK POSTER... ஆம், அதில் குறியீடாக இடம்பெற்றுள்ள தீபம்தான், புதிய ஊகங்களுக்கு காரணமாகியிருக்கிறது... தேமுதிகவின் கொடியில் உள்ள தீபத்தைதான், விஜய் தன் 1ST LOOK POSTERக்கு பயன்படுத்தி இருக்கிறார் என்ற தகவல், ராக்கெட் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.
உயிரோடு இருக்கும்போது தன் செயல்களுக்காக பல விமர்சனங்களை எதிர்கொண்டவர் விஜயகாந்த். அவர் இருக்கும்போது செய்த உதவிகளும், நற்செயல்களும், மறைவுக்குப்பின்னர் அதிக கவனம் பெற்றன. அது அவர் மீது அனுதாப அலையை உருவாக்கியது. அதை GOAT படத்தில் விஜய்காந்தை பார்த்த ரசிகர்களின் ஆரவாரத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. GOAT படத்தில் விஜயகாந்த் கேமியோ ரோலில் வருகிறார் என்றதும், அவரை எப்படி காட்சிப்படுத்தப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அப்போது, விஜயகாந்தின் நினைவு நாளையொட்டி அவரின் இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார், விஜய்... இது ஆரோக்கியமான அரசியலாக பார்க்கப்பட்டாலும், விஜயகாந்தின் ரசிகர்களையும், தேமுதிக தொண்டர்களையும் தன் பக்கம் ஈர்ப்பதற்கு விஜய் முயற்சிக்கிறார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
அந்த விமர்சனங்கள் GOAT படம் வெளியானபோது இரட்டிப்பாக மாறியது.. விஜயகாந்தின் முகத்திரை அணிந்திருக்கும் நபர் அதை அகற்றும்போது, அங்கு விஜய்யின் முகம் தெரிவதைப்போல் காட்சி உருவாக்கப்பட்டிருந்து. விஜயகாந்துக்கு அடுத்து அரசியலில் கோலோச்சப்போகும் அடுத்த ஹீரோ விஜய்தான் என சொல்வதே காட்சியின் நோக்கம் எனக் கூறப்பட்டது.
முன்னதாக நடித்த பல படங்களில் விஜயகாந்தின் ரெஃபரன்ஸை விஜய் வைத்திருக்கலாமே? கட்சி தொடங்கியபின் விஜயகாந்த் ரெஃபரன்ஸை முன்னிலைப்படுத்துவது ஏன் என்ற கேள்விகள் எழலாம்... ஆனால், விஜய்க்கும் - விஜயகாந்துக்குமான தொடர்பு 30 வருட வரலாறு கொண்டது... விஜய் சினிமாவில் நாயகனாக உருவெடுப்பதற்கு முன்னரே, செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்துக்கு தம்பியாக அறிமுகமாகிவிட்டார்.
தன் வளர்ச்சியில் விஜயகாந்துக்கு முக்கிய பங்கு உள்ளது என, விஜயே பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார். லியோ பட வெற்றி விழாவில் கூட, கேப்டன் என்றால் அது விஜயகாந்த் ஒருவர் மட்டுமே என புகழ்ந்து பேசினார்... அப்போதெல்லாம் அது பெரிதாகத் தெரியவில்லை.. ஆனால், சினிமாவைக் கடந்து அரசியலில் நுழைந்திருக்கும் விஜய்யின் ஒவ்வொரு நகர்வும், பல கோணங்களில் முடிச்சு போடப்பகிறது.
அதன் தொடர்ச்சியாகத்தான், GOAT பட கேமியோ, விஜய் 69 பட போஸ்டரில் உள்ள தீபம் உள்ளிட்டவை பேசுபொருளாகியிருக்கிறது... விஜயகாந்தைப் போல் சினிமாவில் மக்கள் பிரச்னைகளைப் பேசினார், விஜய்... அவரின் ரசிகர் மன்றம் இயக்கமாக மாறியது.. கட்சி தொடங்கும் முன்னரே அணிகளை உருவாக்கி, கட்டமைப்பை பலப்படுத்தினார்... இன்று அடுத்த பாய்ச்சலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதே அவரை உற்றுநோக்குபவர்களின் கருத்தாக உள்ளது.
முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரும் ஆளுமைகள் அசுரப் பாய்ச்சலில் இருந்த காலத்திலேயே, அசராமல் அரசியலுக்கு வந்தவர், விஜயகாந்த்... தனக்கென தொண்டர்கள் பட்டாளத்தை உருவாக்கி, அரசியலில் எதிர்கட்சித் தலைவராக உயர்ந்தவர்... வெற்றிக்கான ஓட்டத்தில் விஜயகாந்தின் வழியையே விஜய் பின்பற்றுகிறாரா? விஜய்யின் நடவடிக்கைகள் தேமுதிக தொண்டர்களை ஈர்க்கும் முயற்சியா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர் நடத்த இருக்கும் மாநாட்டில் பதில் தெரிந்துவிடும்.