தமிழ்நாடு

அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தை சீர்குலைத்தால்... – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை

அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தை சீர்குலைத்தால்... – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை

Veeramani

வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து, அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால், அதனை அஇஅதிமுக கடுமையாக எதிர்க்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருமான வரி செலுத்துவோரின் விவரங்களை அவர்களின் ஆதார் எண்ணுடன் வழங்குமாறு வருமான வரித்துறையிடம் உணவுத்துறை வாயிலாக திமுக அரசு கேட்டுள்ளது. இது அனைவருக்குமான பொது விநியோகத்திட்டம் என்பதை சீர்குலைப்பதாக அமைத்துள்ளது.

தமிழகத்தில் பொது விநியோக திட்டம் மூலமாக 2 கோடியே 20 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு வருமான வரி விவரங்களை உணவுத்துறை கேட்கிறதோ என்ற எண்ணம் எழுகிறது. தற்போதைய தமிழக அரசின் நடவடிக்கை அனைவருக்குமான பொதுவிநியோகத்திட்டம் என்ற நோக்கத்திலிருந்து தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள இலக்கு சார்ந்த பொதுவிநியோக திட்டத்திற்கு திசை மாறுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது” என்று தெரிவித்துள்ளார்.